பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


 முனிவன் ஒரு வேளை மயங்கியிருக்கக்கூடும். அப்போது இராமன், அவள் நெஞ்சறியத் தவறு செய்யவில்லை. ஆகவே, ஏற்றுக்கொள்க’ என்றான். அதைக் கம்பர் வாக்காலேயே காணலாம்:

'அஞ்சன வண்ணத் தான்தன் அடித்துகள் கதுவா முன்னம்
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி கின்றாள்
நெஞ்சில்லை பிழைப்பி லாளை நீஅழைத் திடுதி என்னக்
கஞ்சமா முனிவன் அன்ன முனிவனும் கருத்திற்கொண்டன்

.
- (அகலிகை சாபம். 85)

இவ்வாறு மன்னிப்பின் சிகரத்திலே வைத்து, மனமறியாக் குற்றத்தை மறந்து, பண்போடு அவர்களை ஏற்று அணைக்க வேண்டிய ஒரு மனித குணத்தினைக் கம்பர் அன்று சொன்னர். அது இன்றும் மெய்யாய் விளங்குகின்றதன்றே!

இனி, கம்பர் கற்பின் திறத்தைத்தான் எப்படிச் சொல்லுகிறார்! கற்பு வெறுவாக்கால் மட்டும் விளைவதொன்றன்று; உள்ளத்தால் உற்று உணர்வது. கள்ளாமையைப் பற்றிக் கூற வந்த வள்ளுவர், உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள் வேம் எனல், என்று கூறுகின்றார். நெஞ்சை மறைத்துச் செயலாற்றுவ தென்பது நடவாத ஒன்று. அவ்வுள்ளத்தால் பொய்யா தொழுகும் ஒழுக்கமே உலகத்தார் உள்ளத்தாலெல்லாம் போற்றும் நேரிய ஒழுக்கமாகும். இவ்வொழுக்க நெறி யைக் கம்பர் திறம்படக் காட்டுகின்றார். இராமனை விட்டுப் பிரிந்த சீதை இலங்கையிலிருந்து ஏதேதோ எண்ணுகிறாள். ஒரு வேளை இராமன் தன்னை மறந்து மற்ருெருத்தியுடன் வாழ முடிவு செய்து விட்டானே என்றுகூட முடிவு கட்டி விடுகிறாள். அந்த நிலையில் அனுமன் அங்கு வந்துசேர, அவனிடம் இராமன் தன்னை மறந்து வேறொருத்தியை மனத்தாலும் நினைக்கக் கூடாது என்கிறாள்; அவ்வாறு அவனே வாக்களித்ததாகவும் கூறுகிறாள்.