பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழேந்தியார்



 

சோலையில் எத்தனையோ விதவிதமான செடிகளும் மரங்களும் நிறைந்து தம் வண்ண மலர்களாலும் இனிய கனிகளாலும் பிறவற்றாலும் மக்களுக்கு மகிழ்வூட்டுகின்றன. அதே நிலையில் தமிழ்ச் சோலையில் பற்பல புலவர்கள் காலந்தோறும் தோன்றி, இனிய கவிகள் இயற்றித் தமிழ் நலத்தைப் பரப்பியுள்ளனர். சங்க காலத்துக்கு முன் தொட்டு இன்றுவரை தமிழ்ச்சோலையில் வளர்ந்த காவியங் களாகிய ‘கற்பகத்த’ருக்கள் எத்தனையோ! என்றாலும், அவற்றுள் ஒரு சில தம் கனியாலும் வாசத்தாலும் இன்றளவும் மங்காமல் வாழ்கின்றன. சங்க காலத்திலும் சரி, பிற்காலத்திலும் சரி, எத்தனை எத்தனையோ கணக்கற்ற புலவர்கள் வந்து வந்து சென்றுள்ளார்கள். ஆனால், அவருள் சிறந்த ஒரு சிலர் மட்டுமே இன்றளவும் வாழ்கின்றார்கள். ஒரு சிலர் தம் பெயர் மாயினும் பாட்டு மாயா வகையில் சிறந்துள்ளனர். இத்தகைய நல்ல புலவர் வரிசையில் வைத்து எண்ணப்படுபவர் புகழ் ஏந்தி நிற்கும் புகழேந்தியாராவர்.

நல்ல புலவர்தம் இயற்பெயரை நாட்டில் நாம் அறிய முடிவதில்லை. உலகம் புகழும் ஒப்பற்ற திருக்குறளைத் தந்த அந்தப் புலவர்தம் இயற்பெயரை யாம் அறியோமே! ஔவையார் என்ற பெயரும் கம்பர் என்ற பெயருங்கூட இயற்பெயர்களென்று கூற முடியாதே. ஔவையார் என்பது பெரும்பாலும் வயது முதிர்ந்த பெண் பாலாரைக் குறிப்பதை இன்றும் காண்கின்றோம். ஔவையார் என்ற புலவரும் அதனாலேதான் போலும் இருவர் மூவர் என்று எண்ணப்படுகின்றனர்! கம்பர் என்ற பெயரும் காரணப்-