பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழேந்தியார்

121


கதை இவ்வாறு சிறியதாக அமையினும், அதைக் காவியத்துக்கு ஏற்ப விரிவாக்கி, இயற்கை நலனும், செயற்கைப் பண்புகளும் பொலிய வெண்பாவால் ஒரு பெருங்காவியமாகவே ஆக்கிவிட்டார் புலவர் புகழேந்தியார். அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும், உடன் இருந்த புலவர் பற்றியும் வழக்கில் உள்ள கதைகள் அவர் புகழை மேலும் சிறக்க வைப்பனவாகும். பாண்டி நாட்டுப் பேரவைப் புலவராய் இருந்து, அம்மன்னன் மகளுடன் ‘சீதனப்’ பொருளாகச் சோழநாடு வந்து, அந்த நாட்டு அவைப் புலவரால் சிறையிடப்பெற்று, பின் சிறந்த புலவர் என்பதை ஒட்டக்கூத்தரே ஏற்றுக்கொள்ளும் வகையில் வாழ்ந்தவர் என்பது அவர் வரலாறு. எனவே, அவர் வாழ்ந்த காலத்திலே, அவரை ஒத்த புலவர்கள் முதலில் பொறாமையால் புழுங்கினார்களானாலும், பின் அவர் புலமை அறிந்து போற்றினார்கள் என்பது நன்கு தெளி வாகின்றது. இத்தகைய புலவர் புகழேந்தியார் பாடியதாக ‘அல்லியரசாணி மாலை’, ‘புலந்தரன் களவு’ போன்ற பிற்காலத்து நூல்களும் எண்ணப் பெறுகின்றன. ஆயினும், அவை அமைந்த செய்யுள் நெறியும், கருத்தளவும், பிறவும் நோக்கின், யாரோ அதே பெயரை உடைய ஒரு புலவரால் பிற்காலத்தில் பாடப்பெற்றவை அவை என்று தான் முடிவு செய்யப்பெறும். எனவே, நாம் அவற்றை விடுத்து, புகழேந்தியாரின் நளவெண்பா ஒன்றைப் பற்றி மட்டும் ஈண்டு எண்ணிப் பார்ப்போம்.

நளன் கதையைச் சுருக்கமாகக் கண்டோம். அக் கதைக்கு இடையில் புகழேந்தியார் பலப்பல நல்ல கருத்துக்களைப் புகுத்துகின்றார். அக்கதை மூலம் நாடாளும் நல்லவர் எப்படி இருக்கவேண்டும் எனவும், அரசருக்கும் குடிகளுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது எனவும், இன்பமும் துன்பமும் வாழ்வில் மாறி மாறி வருவன எனவும், அவை வருங்கால் அவற்றை எவ்வாறு ஏற்று வாழவேண்டுமெனவும், சூதின் கொடுமை எத்தகையது எனவும், காதல் வாழ்வு எவ்வாறு இன்பம் தருகின்றதென-