பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகுடம் தடந்தோளான்—காமருபூந்
தாரான் முரணைநகர் தான்என்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி.’ (24)

இவ்வாறே இன்னும் பல இடங்களில் சந்திரன் சுவர்க்கியைய் பாராட்டிப் போற்றியுள்ளார். தமயந்தியின் சுயம்வரம் காண வந்து சேர்ந்த மன்னர் கூட்டத்தை, சந்திரன் சுவர்க்கியைப் பாட வந்த புலவர் தம் கவியாகிய தமிழ்ப் பாடலுக்கு ஒப்பிட்டுப் பார்க்கின்றார். அவ்வாறு பார்க்கும்பொழுது அவனது அரசியல் தோற்றம் அவர் முன் தோன்றுகிறது. அனைத்தையும் கோத்துப் பாடுகின்றார் புலவர்.

‘மாமுத்த வெண் குடையான் மால்களிற்றான் வண்டிரைக்கும்
தாமத் தரிச்சந் திரன் சுவர்க்கி—நாமத்தால்
பாவேய்ந்த செந்தமிழாம் என்னப் பரந்ததே
கோவேந்தர் செல்வக் குழாம்.’ (64)

என்னும் போதுதான் அப்புலவருடைய நன்றி காட்டும் தன்மை எப்படி விளங்குகின்றது! இவ்வாறே பற்பல இடங்களில் அம்மன்னனைப் புகழேந்தியார் பாராட்டியிருக்கின்றார். நளனைக் கலிதொடரும்போதும், அக்கலி நீங்கும் போதும் அவன் மனைவியை விட்டுப் போகும் போதும் புலவர், சந்திரன் சுவர்க்கியை எண்ணி எண்ணிப் பாராட்டுகிறார்.

‘தாருவெனப் பார்மேல் தருசந் திரன்சுவர்க்கி
மேருவரைத் தோளான்’ (287)
‘சங்க நிதி போல் தருசந் திரன் சுவர்க்கி’ (308)
‘வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட்டு எங்கோமான்
தண்டார் புனைசந் திரன் சுவர்க்கி’ (381)

என்று பலப்பல வகைகளில் உவமித்துப் பாடும் திறன் நூல் வழிப் பயின்று இன்புறத்தக்க தொன்றாகும்.