பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்வும்

7


அவருள் பலரை அறிஞராகக் காண்கின்றார். பலரை அன்பராகக் காண்கின்றார்; பலரை மெய் உணர்வினராகக் காண்கின்றார். ஆனால், ஒருவரைத்தான் கலையுணர்வினராகக் காண்கின்றார். அவர் கண்ட கலை உணர்வினர், உயர் குலத்துப் பிறந்தோ, பற்பல நூல்களைக் கற்றோ, பிற வகையாலோ மேம்பட்டவர் என்று கூறத் தகாதவர். எனினும், அவர் ஒருமையுணர்வு பெற்றவர்; கல்லில் கலை நலம் கண்டவர்; ஆண்டவனை உண்மையில் அறிந்து போற்றியவர்; அக்கல்லின் கண்ணில்—அல்ல—கடவுளின் கண்ணில் இரத்தம் கசியக் கண்டவர்; தம்மை மறந்தவர்; தம் கண்ணை இடந்து அப்பினவர்; அதனால் கண்ணப்பர் என்றே வழங்கப் பெற்றவர். அவரைத்தான் அனைத்தும் உணர்ந்த சுந்தரர், ‘கலி மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்,’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். அப்படி அக்கண்ணப்பரிடம் சுந்தரர் கண்ட கலை நலம் எத்தகையது? திண்ணனாராகிய கண்ணப்பர், வேடுவர் குலத் தலைவர்; வேட்டையாடிப் பிழைப்பவர். அதிலும் வேட்டையைக் கலையாகக் கொண்டவரல்லர் அவர்; அறிவியல் நூல்களையும் பிறவற்றையும் கற்றுத் துறைபோகியவருமல்லர். அவ்வாறிருந்த ஒருவரை எப்படிக் ‘கலைமலிந்த கண்ணப்பர்’ ஆக்கினார் சுந்தரர்? அவரிடம் ஒருமை உணர்வு கண்டார். பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த பிராமணருக்குக் காளத்தியப்பர் ஒரு கல்லாகவே நின்றார். ஆனால், அன்று கண்ட கண்ணப்பருக்கு அவர் கடவுளாயினார். அதற்கு முன் அவர் அது போன்ற கடவுள் உருவைக் கண்டதில்லை. நாணன், ‘மலை உச்சியில் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்,’ என்றதும் முன் பின் அறியா வகையிலேதான் சென்றார்; ஆனால், சிவலிங்கத்தைக் கண்டதும் சிந்தை மயங்கினார்; தம்மை மறந்தார்.