பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


டிப் போற்றும் வகையில் அரசு இயங்க வேண்டுமென்பதே புலவர் விருப்பம் என நன்கு புலனாகும். இவ்வாறு புகழேந்தியார் மட்டுமன்றிப் புலவர் அனைவரும் உலகம் வாழவேண்டுமென்று பாடுபடுகின்றவர்கள் தாமே? சங்க காலப் புலவர் தொட்டுக் கவிமணி வரை இவ்வரசியல் பகுப்பையும் அமைப்பையும் வாழ்வொடு கலந்து கலந்து காட்டிக்கொண்டு செல்லும் முறையைக் காணாதார் யார்? கதைகளும் இத்தகைய உண்மைகளையும் அறத்தாறுகளையும் இடையிடையே புகுத்தி மக்களுக்கு அறிவுரை புகட்ட அமைந்தவை யன்றோ? இந்நளன் வரலாறும் அந்த வகையில் அமைந்த ஒன்று என்றே கொள்ள வேண்டும்.

இனிப் புலவர் தமயந்தியின் மேல் வைத்து மகளிர் வாழ வேண்டிய வகையையும் மேற்கொள்ள வேண்டிய கற்பு நெறியையும் நன்கு விளக்கிக் காட்டும் முறையைக் காண்போம். தமயந்தியின் பெண்மை நலத்தை அன்னம் பேசுகின்றது. தனக்கு இன்னல் ஒன்றும் இழைக்காத மன்னனுக்குக் கைம்மாறு ஆக அம்மங்கை நல்லாளை மண முடிக்கக் கருதிற்று அன்னம். உடனே அத் தமயந்தியின் தோற்றப் பொலிவையும், குண நலனையும் தொகுத்து, நளன் முன் பாட்டோவியத்தில் அவள் உருவையும் அழகையும் காட்டிவிட்டது. அதன்வழி நன் மகளிர் இயல்பையே அப்புலவர் காட்டிவிட்டார் என்னலாம்.

‘நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல் அமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா—வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.’ (39)

என்றும்,

செந்தேன் மொழியாள் செறிஅளக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார்—வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்.’ (42)