பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


பல்வேறு வகையில் பாராட்டியுள்ளதை நாமறிவோம். புகழேந்தியார் அதே மாலைக் காலத்தை விளம்பும் முறை ஒருவகையில் சிறந்துள்ளது.

‘மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப—முல்லைஎனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.’

என்ற மாலைப்பொழுதின் வருணனை மனத்துக்கு இனிய தன்றோ? மாலைக் காலத்து இயல்பான நிகழ்ச்சிகளைக் கோத்து அந்திப் பொழுதை அரசு எனும்படி சிறப்பிக்கும் இயல்பு சிறந்த ஒன்றல்லவா? இப்பாடலைப் பற்றி வேடிக்கையாக ஒரு வரலாறு உண்டு. இதைப் புலவர் அவையில் புகழேந்தியார் பாடி அரங்கேற்றிய பொழுது, பொருட்குற்றம் கண்டார்களாம் அங்கிருந்த புலவர்கள். ‘சங்கின் பின் புறத்திலேதான் அதை ஊதுபவர்கள் வாய் வைத்து ஊதுவார்கள். வண்டுகளோ, முன்புறத்தேதான் தேனை உண்டு ஊதுகின்றன. ஆகவே, இந்த விளக்கம் பொருந்தாது,’ என்றார் சிலர். உடனே புலவர் சற்றும் தயக்கம் கொள்ளாது, ‘கள் உண்டவனுக்கு முன்னும் பின்னும் எப்படிப் புரியும்? கள்ளாகிய தேனை உண்டு மயங்கிக் கிடக்கின்ற வண்டுக்கு முன்னும் பின்னும் அறிந்துகொள்ள வழி ஏது?’ என்று மடக்கிவிட்டார் என்ற கதை வழக்கத்திலுள்ளது. இது உண்மையோ, அன்றிக் கட்டுக் கதையோ! ஆனாலும், இதனால் புலவருடைய சமயோசித அறிவு புலனாகின்றதன்றோ?

பெண்கள் இயற்கையில் நல்ல நடை உடையவர்கள். அவர் தம் நடையை அன்ன நடையோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள் புலவர்கள். அக்கருத்தைப் புகழேந்தியார் கூறும் இடம் மிகவும் அழகு நலன் வாய்ந்ததாகும். பொய்கைக்கு அழகு நலம் காணச் செல்லுகின்றான் நளன். அதன் கரையிலே அமர்ந்து அந்த இன்பப் பொழுதைக் கழிக்கின்ற அந்த வேளையில் இன்பப் பொய்கையின் நடுவில் அமர்ந்திருந்த அன்னத்தை