பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழேந்தியார்

131


அடைய விரும்பிக் கண்ணால் பருகுவார் போல நோக்குகின்றனர். செய்ய தாமரை மலர்கள் பல பூத்த தடாகத்தில் ஓர் அன்னம் செல்லுகிறது. ஒவ்வொரு தாமரையும் அவ்வன்னத்தைத் தன்னிடம் ஈர்த்துக் கொள்ள விரும்புகின்றது. ஆனால், அது தன்னிச்சையாய்ச் சென்று தான் விரும்பிய மலரிலே தங்குகின்றது. இந்த வகையில் மன்னர் கண்களெல்லாம் அவளை நோக்கிய போதிலும் அவள்கண் நளனையே தேடிக் கடைசியில் வெற்றியும் பெற்றுவிட்டது. இந்த உண்மைகளையெல்லாம் அடக்கி உவமை உருவகம் அனைத்தும் கலந்து,

‘மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள்—மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய்ப் போவதே போன்று,’ (138)

என்று அழகாக எடுத்துக்காட்டுகின்றார் புலவர். இது போன்ற பல உவமை நலம் தோன்றும் இனிய பாடல்கள் நூல் முழுதும் நிறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்.

புலவரின் கவிச்சிறப்பினுக்கு இன்னும் இரண்டொன்று மேற்கோளாகக் காட்டி என் உரையை முடித்துக் கொள்ளுகிறேன். நளன் அரசியற்றொழில் மட்டுமன்றி, அடுதொழிலும் தேரோட்டலிலும் வல்லவன் என்பது உலகறித்த உண்மை. அத்தேரோட்டற் சிறப்பினையும் அடுதொழிலையும் இந்நூலில் நன்கு காணலாம். நைடதம் பாடவந்த அதிவீரராம பாண்டியரும் இவ்விரண்டினைப் பற்றியும் பிறவற்றைப் பற்றியும் நன்கு பாராட்டுகின்றார்.

நளன் கலியின் வெம்மையால் இருதுபன்னனுக்குத் தேர் ஓட்டுவானாகின்றான். அத்தேரின் விரைவைக் குறிக்க இரண்டு புலவரும் ஒரே உபாயத்தைத்தான் கையாளுகின்றனர். இருதுபன்னனது மேலாடை தேரோடும் வேகத்தில் பறந்து விழ, அதை உடனே எடுத்துத் தருமாறு நள-