பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாருக்குப் பின்

135


பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற விருப்பத்திலேயே இந்தத் தலைப்பினை அமைத்திருக்க வேண்டும். ஆகவே, அதே நெறியில் நானும் நின்று இன்றைய எனது கங்கைக் கரையின் இறுதிப் பேச்சினை முடித்துக்கொண்டு உங்களிடம் விடையும் பெற்றுக் கொள்ளுகிறேன்.

பாரதியாரை இலக்கிய உலகத்தின் கால எல்லையின் வரம்பாக்கி அக்காலத்திற்கு முன்னும் பின்னும் இவ்விலக்கியம் வாழ்ந்ததை எண்ணிப் பார்க்கின்றனர் அறிஞர். தமிழ் நாட்டு இலக்கியம் காலந்தோறும் தன் போக்கில் எத்தனைத் தூற்றல்களும் எதிர்ப்புக்களும் இருந்தாலும், வளர்ந்துகொண்டேதான் வந்திருக்கிறது. காலத்தேவதை அதன் வளர்ச்சியை நோக்கிக் கருத்திருத்திக்கொண்டுதான் செல்கின்றாள். அவள் அணைப்பில் பல இலக்கியங்கள் வளர்ந்து மலர்கின்றன. பெற்றெடுத்த பெரும் புலவர்கள் காலத்தால் மாய்ந்தொழிந்தாரேனும், அவர்தம் வாழ்விலக்கியங்களை அக்காலச் செல்வி மாயாமல் காத்து வளர்த்தே வருகின்றாள். வாழ்வொடு பொருந்தாத ஒரு சில இலக்கியங்கள் காலத் தேவதைக்கும் பொருந்தாதவையே. எனவே, அவைகள் மறைகின்றன். அவ்வாறு தம் போக்கில் வளர்த்து வரும் இலக்கியங்களைப் புலவர் தம் வாழ்நாட்களை ஒட்டி எல்லை வகுத்துப் பிரிக்கச் சிலர் கருதுகின்றனர். அது சரியா தவறா என்று ஆராய்வது நம் நோக்கமன்று. சங்க கால இலக்கியங்களுக்குப் பிறகு பெரும்புலவராய் இருந்த இலக்கிய ஆசிரியராகிய கம்பரைக்கொண்டு, அக் கம்பருக்கு முன்னும் பின்னுமாக இலக்கியத்தைப் பிரிப்பர். அதைப்போன்றே பாரதியாரை முன்னிறுத்தி அவருக்கு முன்னும் பின்னுமாக இலக்கியத்தைப் பிரித்துள்ளனர். தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பாரதியார் போன்ற புலவர்கள் ஒவ்வொரு திருப்பு மையத்தை உண்டாக்கிக்கொண்டே செல்லுகின்றமையின், இந்த முறை ஒருவாறு சரியானதேயாகும்.