பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


கோயில் குளங்களும் வேணதுண்டு—ஆனால்
      கும்பிடப் போவதில் சண்டையில்லை
வாயில் ஜபதபம் வஞ்சனை நெஞ்சத்தில்

      வைத்துப் பிழைத்திடத் தேவையில்லை.’

என்று காட்டுகின்றார். இத்தகைய ஒரு நல்ல சமுதாயம் இந்த நாட்டில் உண்டாக வேண்டும் என்பதே அவர் ஆசை. அந்நிய ஆதிக்கம் அகன்றாலும், மற்றவையெல்லாம் மாறவில்லை. அனைத்தும் அவர் ஆசைவழி நிறைவேறுமாயின், இந்த நாட்டைப் போன்று வேறு எந்த நாடும் இருக்க முடியாதே! மண்ணாசையும் பிற ஆசைகளும் கொண்டு போர் தொடுக்க நிற்கும் வல்லரசுகளையும் பிறரையும் கண்டு நாமக்கல்லார் நல்லுரை பகர்கின்றார். கருணைக் கடலாகிய புத்தரும், அவர் வழியே காந்தியும் தோன்றிய நாட்டிலே அத்தகைய கொடுமைகள் நடை பெறலாகாது என்பது அவர் ஆசை. அதை அவர் வாக்கிலேயே காண்போம்:

‘சூரம் கூறிச் சென்றவர்—சொன்ன தோடு நின்றனர்
நேரில் போரில் சிக்கினார்—நிரபராதி மக்களே
பெற்ற தாய்கள் ஓலமும்—பேய்பு குந்த கோலமும்
இற்றொழிந்த சுற்றமும்—இவைக ளேநம் வெற்றிகாண்
புத்தவர்வந்து போனதும்—புனிதன் காந்தி வந்ததும்

பொய்த்துப் போக ஒண்ணுமோ—புவனி ஓங்கி வாழுமே!’

ஆம்! அவர் ஆசையே புவனி முழுதும் ஓங்கி வாழவேண்டும் என்பதுதான். அந்த ஆசை நன்கு நிறைவேற வேண்டுமென்று வாழ்த்தி நாமும் அவரிடம் விடைபெற்றுக் கொள்வோம்.

அண்மையில் மறைந்த கவி மணியாரை ஒரு சிறந்த பெருங்கவிஞர் என்னலாம். அவர்தம் கவிதை நலமெலாம் கண்டுதான் போலும் அவர் கவிகளுக்கெல்லாம் மணியாயவர் என்று கருதிக் ‘கவி மணி’ என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்! இன்று தமிழ்நாடும்-ஏன்-தமிழர் நெடுந்தொலையில் வாழும் இக்கல்கத்தாப் போன்ற இடங்-