பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


கக்கூடுவதன்று. அவர்தம் தனிக் கவிதைகளையெல்லாம் தொகுத்து ‘மலரும் மாலையும்’ என்ற பெயரிலே வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றுள் ஒரு சில காணல் ஏற்புடைத்து என எண்ணுகின்றேன்.

கடவுள் வழிபாட்டைப்பற்றி அவர் பாடிய கருத்து அறியவேண்டிய ஒன்றாகும். பலர் ஆரவாரத்துக்காகவும், தாம் செய்த தவறுகள் மறைவதற்காகவும், வேறு பல தேவையற்ற காரணங்களுக்காகவும் ஆடம்பர விழாக்களைக் கோயில்களில் செய்வதை நாம் அறிவோம். அவர்கள் உள்ளமெல்லாம் கடவுளிடத்தில் செல்வதில்லை. உள்ளம் பணம், பட்டம், பதவி என்று எண்ணி, அவற்றைத் தெய்வமாகக் கருதிப் போற்றும். ஆனால், அந்தக் கபட நாடகம் தெரியாதிருக்க வெளியே ஆரவாரப் பூசைகள் நடைபெறும். அன்பின் வழி ஆற்றாச் சிறப்பொடு பூசனை ஆரவாரத்தனமேயன்றி ஆண்டவன் பணியாகாது. இதை அன்றுதொட்டு இன்றுவரை எல்லா நல்லறிஞர்களும் கூறித்தான் வருகின்றார்கள். நம் கவிமணியாரும் இவ்வுண்மையை,

‘கோயில் முழுதும்கண்டேன்—உயர்
        கோபுரம் ஏறிக்கண்டேன்
தேவாதி தேவனையான் தோழி
        தேடியும் கண்டிலனே!’

என்றும் இன்னும் பல வகையிலும் அவனைத் தேடித் தேடிக் குளத்திலும் சிற்பத்திலும், பொன்னிலும் பூவிலும், தூப தீபத்திலும், பதிகளிலும் அவற்றின் ஆரவாரத்திலும் காண முடியவில்லையே என நைந்துருகுகின்றார். கடைசியில் அவர் அவ்வாறு பண்ணும் பூசைகளால் பயனில்லை என்றும், உள்ளம் இறைவனைக் கண்டு உறவாடுதலே சிறந்த வழி என்றும் கூறி முடிக்கின்றார்:

‘கண்ணுக் கினியகண்டு—மனத்தைக்
        காட்டில் அலையவிட்டுப்
பண்ணிடும் பூசையாலே—தோழி
        பயன்ஒன்று இல்லைஅடி.’