பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாருக்குப் பின்

147


கவிதைகளும் நாட்டில் நாள்தோறும் தோன்றி மறைகின்றன என்பது உண்மைதான். ஆனால், அதனாலேயே வேறு நல்ல கவிஞர்கள் இன்று நாட்டில் இல்லையென்று யார் சொல்ல முடியும்? தமிழ் இலக்கிய உலகு மட்டுமன்றி, பரந்த பாரத நாட்டு மொழிகள் அத்தனையும் இன்று புத்துணர்ச்சியோடு வீறு பெற்று வளர்கின்றன. தமிழும் பாட்டும் உரை நடையும் கலந்த வளர்ச்சியில் மிக்கோங்கியுள்ளது என்னலாம். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், புதுமைப்பித்தன் போன்ற ஒரு சிலர் பாடல்களைத் தமிழ் நாடு மறக்க முடியுமா? அவர்களை மறந்தாலும், அவர்தம் பாடல்களை மறக்க முடியாதே! இன்று வாழ்கின்றவருள்ளே கலையுள்ளமும் கவிதைப் பண்பும் கொண்டு நல்ல கவிதை எழுதும் வல்லவர் சிலர் உள்ளனர். ஒவ்வொருவரையும் இன்னார் இன்னார் என்று எடுத்துக் காட்டி ஒவ்வொருவருடைய பாடலிலும் பொதிந்த கருத்துக்களை மேலும் காட்டிச் செல்ல இயலாது. வாழ்கின்றவர்களைப்பற்றி நேர்மையாக ஆராயுங்கால் எடுத்துக்காட்டுவது நல்லதயின் தவறில்லை; அல்லதாயின், வீண் விரோதமன்றோ சேரும்? எனவே, இன்று பல நல்ல கவிஞர்கள் வாழ்கின்றார்கள் என்ற அந்த அளவிலே கூறி, அவர் தம் பாடல்கள் பல நாள்தோறும் உங்கள்முன் நாள் இதழ்களிலும் பிற பத்திரிகைகளிலும் வெளி வந்து கொண்டேயிருப்பதால், நீங்களே அவற்றின் ஏற்றத்தாழ்வை அறிந்து கவிஞர் வாழ்கின்றார் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள் என்று நிறுத்திக்கொள்ளுகிறேன்.

இன்று தமிழ் நாட்டில் கவிதையைக் காட்டிலும் உரைநடை அதிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது என்னலாம். பேராசிரியர்களான ரா. பி. சேதுப்பிள்ளை, டாக்டர் மு. வரதராசனார் போன்ற இலக்கிய ஆசிரியர்கள் வழி நல்ல இலக்கியம் நாட்டில் வளர்கின்றது. அவர்தம் தகுதியும் நூலின் சிறப்பும் அறிந்து இந்திய அரசாங்கத்தாரும் சென்னை அரசாங்கத்தாரும் சிறந்த பரிசுகளை வழங்கிவரு-