பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாருக்குப் பின்

149


சரும் செய்யும் தொண்டினை நாடு மறவாது. பல இசைப்புலவர்கள் தாமே சொந்தமாகப் பாட்டிசைத்துப் பண் ஒன்றப் பாடுவதைக் கேட்டு மகிழ்கின்றோம்.

இதே நிலை நாடகத் தமிழிலும் உண்டு. தமிழில் அனேக நாடகங்கள் இல்லைதான். சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீய நாடகத்தைப்போன்ற சிறந்த இலக்கிய நாடகங்கள் நாட்டில் குறைவுதான். என்றாலும், பம்மல் சம்பந்த முதலியார், பரிதிமாற்கலைஞர் போன்றோர் அக்குறையை ஒருவாறுநீக்கி நாடகங்கள் பலவற்றை எழுதித் தந்திருக்கிறார்கள். இன்றும் சில நல்ல நாடகாசிரியர்கள் வாழ்கின்றார்கள். நாடக மேடைகள் நாட்டில் அவ்வளவாக இல்லையேனும் இருக்கும் ஒருசில சிறந்தனவாக உள்ளன. பழமையும் புதுமையும் பிணையப் பல நல்ல நாடகங்கள் தமிழ் நாட்டு மேடைகளில் நடிக்கப் பெறுகின்றன. T.K.S. சகோதரர் தம் ‘இராசராச சோழன்’ ‘இமயத்தில் நாம்’ போன்ற வரலாற்று நாடகங்கள் எத்தனை முறை கண்டாலும் தெவிட்டாதவை அல்லவோ? நாடகத்தை நினைக்கும்போது படக்காட்சியும் கூடவே முன் வருகின்றது. படக்காட்சியிலுந்தான் தமிழ் எத்துணை முன்னேற்றம் பெற்றுள்ளது! அந்தப் பேச்சுக்களை கேட்பதற்காகவே சிலர் ஒரே படத்தைப் பல முறை பார்க்கின்றார் என்பதை அறிவோம். படக்காட்சியில் பாடல்கள் அத்துணை ஏற்றம் பெற்று உயராவிட்டாலும், உரை நடை வளர்ந்துள்ளது என்னலாம். இவற்றுக்கிடையில் இந்திய அரசாங்கத்தார் வானொலி மூலம் தமிழ் இலக்கியத்தை வளர்த்துவருகின்றார்கள் எனப் பலர் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் கூறும் அத்துறையில் போதிய கருத்து இருத்தவில்லை என்பது உலகறிந்ததே. ஒரு வேளை இனி வரும் தனித்தமிழ்நாட்டில் இயங்க இருக்கும் சென்னை, திருச்சி வானொலி நிலையங்கள் நன்கு பணியாற்றலாம் என நம்புகின்றேன்.

இவ்வாறே ஒவ்வொரு துறையிலும் தமிழும் இலக்கியமும் வளர்ச்சி பெற்றுக்கொண்டே வருவது கண்கூடு.