பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


இவற்றின் இடையில் ஆயிரம் கல்லுக்கு அப்பால் வங்கநாட்டில் வாழும் தமிழர்களாகிய நீங்கள் ஆற்றும் பணி சாலச் சிறந்ததாகும். எந்நிலையில் இருந்தாலும், எத்தொழிலைச் செய்தாலும், மன்னியசீர்த் தமிழ்மொழியை மறவாமை பொருளன்றே? என்று நீங்கள்–பல துறையில் வாழ்வுக்காகப் பணியாற்றும் நீங்கள்–மன்றத்தை உருவாக்கி, அதன் வழி அன்னைத் தமிழைப் போற்றி வளர்க்கும் வகைகளையும் வழிகளையும் சென்ற ஒரு வாரகாலமாக இங்கே உங்களுடன் இருந்து கண்டேன். இனித் தமிழுக்கு நற்காலம் உண்டு. ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று நைந்து பாடிய பாரதியார் தமக்குப் பின் இன்றைய தமிழர் எழுச்சியைக் காணின், ‘தமிழ் காலம் கடந்து’ கரை கடந்து, கடலெல்லாம் கடந்து என்றென்றும் வாழும், என்று எக்காளமிட்டுப் பாடுவார். ஆம்! அவர் ஆவி இன்றும் அவ்வாறு பாடிக்கொண்டிருக்கும் என்பது உறுதி. அவர் காலத்துக்குப் பின் பைந்தமிழ் வளரும் வகையிது.

வரலாற்றுக் காலம் தொட்டு இன்று வரை ஏழு சொற்பொழிவுகளிலும் ஒருவாறு தமிழ் வளர்ச்சியினைக் கண்டோம். இனி வளரும் தமிழ் மேலும் சிறக்கும். அப்பணியை அனைவரும் கலந்த வேறுபாடற்ற தமிழ்ச் சமுதாயம் செய்தல் வேண்டும். அத்தகைய செம்மைப்பணி செய்ய வாரீர் என அனைவரையும் அழைகின்றேன். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்,’ என்று பாரதிதாசன் கூறிய படி தமிழாகிய நம் உயிரை—உடலை—பண்பாட்டை—கலையை—நாகரிகத்தை—நாட்டுவாழ்வை—நலத்தைக் காக்க ஒன்றிய பணியினைச் செய்வோம் நாம். உணர்வுடன் கூடி உழைக்க வாரீர்! அதுவே இனிச் செய்ய வேண்டுவது. கடமை வழியே கருத்து! கருத்தின் வழியே செயல்! அச்செயல் சிறக்க! அதனால் தமிழ் செழிக்க! ஓங்குக! வளர்க! உயர்க!