பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


கலைஞன் தனக்கென வாழாத தாராள மனப்பான்மையே அவனை என்றும் செல்வ நிலையில் வைக்கவில்லை என்னலாம். கலை வாழ்க்கை கொண்டாரிடம் செல்வம் நிலையாதென்பதற்குப் புறநானூற்றில் புலவர் வறுமையைப் பற்றிய பாடல்களைக் காட்டுவர் சிலர். ஆனால், அதே புறநானூற்றில் அவன் வறுமை அடைவதன் காரணத்தைப் பாடிய புலவன் பாட்டை அவர்கள் காணத் தவறி விட்டிருக்க வேண்டும். குமணனிடமிருந்து பெற்று வந்த பெருஞ் செல்வத்தைப் பெருஞ்சித்தரனார் வைத்துக் கொண்டு வாழ்ந்திருப்பாராயின் அவர் தலைமுறை தலை முறையாகப் பெருஞ்செல்வத்தில் செழித்திருக்கக் கூடும். ஆனால், அவர் கலையுள்ளம் அவரை அத்துணை உலோபியாக்கவில்லை. பெற்றது கொண்டு சுற்றம் அருத்தி, மற்றவரையும் உண்பிக்கும் உயரிய வாழ்வு அவர் வாழ்வாய் அமைந்தது. குமணன் கொடுத்த பெருஞ் செல்வத்தைக் கொண்டு வந்து தம் மனைவியிடம் கொடுத்து,

‘இன்னொர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது
எல்லோர்க்கும் கொடுமதி மனைக்கிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேற் குமணன் நல்கிய வளனே.’

என்று ஆணையிடுகின்றார். இத்தகைய கலை உள்ளம் இன்று வாழ்வில் தேவைதானே ? இதை மறந்தவரே வேறு வகையில் பேசுவர்.

இனி இவ்வாறாய கலைஞர் எப்படித் தம் இலக்கியக் கலையை வாழ்வோடு பிணைத்தனர் என்று காண்போம். கலை எங்கும் நிறைந்துள்ள ஒன்று என்பதை முன்னரே