பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கிய வளர்ச்சி

21


காரணத்தாலே; மொழியை அன்னையென வழங்கல் மரபல்லவா? பரந்த இப்பரத கண்டத்தில் இன்று பல மொழிகள் பேசப்படுகின்றன. என்றாலும், அவற்றுள் பழமையான மொழி தமிழே என்பதை மொழி நூலாராய்ச்சியாளர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். தமிழ் பழைமையானது மட்டுமன்று; இலக்கிய வளம் செறிந்தது; இனிமை பொருந்தியது; உலகுக்கு என்றும் தேவையான பலப்பல உண்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பழைமைக்குப் பழைமையாய், புதுமைக்கும் புதுமையாய், பலப்பல கருத்துக்களைக் கற்பார் அனைவருக்கும் தரக் கூடிய வகையில் நாள்தோறும் வளர்ந்துகொண்டே வரும் மொழி தமிழ் மொழி. ஆம்! அம்மொழியில் இலக்கியம் வளர்ந்த வரலாற்றைக் காண்பதே இன்று மாலையில் நான் ஏற்றுக்கொண்ட பணியாகும்.

மொழி என்பது என்ன? மக்கள் தம் உள்ளக் கருத்தை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு கருவி தான் மொழி எனப் பலர் கருதுகின்றனர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால், மொழியின் தன்மை அந்த அளவில் முற்றுப்பெறவில்லை. அதற்கு மேலும் அது ஒரு பெரும் பணியைச் செய்கிறது. வெறுங்கருத்தைப் பரிமாறும் கருவியாக மட்டும் அது அமையின், இன்று பேச்சுவழக்கில் உள்ள எத்தனையோ மொழிகள் வாழ்தல் போதுமே! எழுத்து வழக்கும், அதன்வழி இலக்கியச் செறிவும் இருக்க வேண்டிய தேவை இல்லையே! மற்றும் கால எல்லையைக் கடந்து மனிதர் பண்பாட்டையும், அவர் வாழும் நாட்டு வரலாற்றையும், பிற இயல்புகளையும் என்றென்றும் வாழ வைத்துக் காப்பது மொழியே யன்றோ? எனவே, மொழி என்பது வெறுங் கருத்து மாற்றம்பெறும் கருவியன்று என்பதும், காலமும் கணக்கும் நீத்து உலகையே வாழ்