பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


தாம் உள்ளன. வடமொழியாளர் அறம் பொருள் இன்பம் வீடு என்று பிரித்த நான்கையும் தமிழர் இரண்டாக அடக்கி விட்டனர். இன்பம் ஒன்று அகம். அறம், பொருள், வீடு எனப்பட்ட மற்ற மூன்றும் புறத்தில் அடங்கும். இவையன்றி உலகத்தில் வேறு பொருள் இல்லை எனவே, எல்லா இலக்கியங்களும் இவை பற்றியே பாடுகின்றன. தமிழ் இலக்கியம் மட்டுமின்றி உலகத்தில் காணும் எல்லா இலக்கியங்களும் இவற்றைப் பற்றித்தான் பேசுகின்றன. உலகில் எம்மொழி பேசுபவராயினும், இந் நான்கை விட்டு வேறு வகையில் வாழ்வது இல்லையே எனவே, தமிழ் இலக்கியங்களை அகம் புறம் என்ற இரண்டாகவே பிரித்தனர் பண்டைத் தமிழர்.

பழங்காலத் தமிழ் இலக்கியத்தில் புறத்தைப்பற்றிய வற்றைக்காட்டிலும் அகத்தைப் பற்றிய பாடல்களே அதிகமாகக் காணப்படுகின்றன. தொல்காப்பியர் காலம் முதல், கடைச்சங்க காலம் வரை—அதாவது கி. பி. 2 ஆம் நூற்றாண்டு வரை—எழுந்த இலக்கியங்களையெல்லாம் பிற்காலத்தவர் தொகுத்துத் தொகை நூல்களாக வைத்திருக்கின்றனர். அவையே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப் பெயர் பெறுவன. தொல்காப்பியத்துக்கு உரை எழுத வந்தவர்கள். இக்கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆதலின், இத்தொகை நூல்களிலிருந்தே தொல்காப்பியத்திற்கு மேற்கோள்கள் எடுத்துக் காட்டி யிருக்கின்றார்கள். ஆனால், தொல்காப்பியர் தமக்குப் பின் சுமார் 3000 ஆண்டுகள் கழித்து வரும் இலக்கியத்துக்குத் தம் இலக்கணத்தை எழுதினார் என்பது முற்றும் பொருந்தாத ஒன்றன்றோ? அவர் காலத்துக்கும் அதற்கு முன்பும் வாழ்ந்த இலக்கியங்களெல்லாம் மறைந்து ஒழிய, பிற்காலத்தில் வந்தோர் அவர் தம் காலத்தில் வழங்கிய