பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

29


இலக்கியங்களையே மேற்கோள்களாகக் காட்டினர் என்பது பொருந்தும். அவைகள் எவ்வாறு அழிந்தன? தமிழ் இலக்கியத்திலே சில ஊழிகள் வந்தனவென்றும், அவற்றால் பரந்த தமிழ் நாட்டு நிலப்பரப்பு அழிந்தது. என்றும் குறிப்புகள் வருகின்றன.

‘பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி’

என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. பஃறுளி யாறும் குமரி மலையும் அழிந்தன போலும்! இன்றைய மேலை நாட்டு நில ஆராய்ச்சியாளர் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்றைய குமரி முனைக்குத் தெற்கே இருந்த பரந்த நிலப்பரப்பு ஒன்று அழிந்திருக்க வேண்டும் என்று எழுதியுள்ளனர். எனவே, அப்பரந்த தமிழ் நிலத்தில் தோன்றிய இலக்கியங்கள் ஊழிகளால் அழிய, அவற்றின் இலக்கணம் காணும் தொல்காப்பியம் தப்பிப் பிழைத்து இன்றளவும் வாழ்ந்து வருகின்றது என்று கொள்ளலாம். தொல்காப்பியம் இலக்கணம் என்றதோடமையாது, தானே ஒரு பேரிலக்கியம் என்னும் வகையிலும் சிறந்து வாழ்கின்றது.

தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னும் தமிழ் இலக்கியம் வளர்ந்து கொண்டேதான் வந்தது. அந்த இலக்கியங்களின் தொகுதிகள் தாம் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும். பஃறுளியாறு இருந்த காலத்து எழுதிய பாடல்களில் இரண்டொன்றும் இத் தொகுதிகளில் காணப்பெறுகின்றன. எனவே, கடைச்சங்க காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரை எழுந்து சாவாது வாழ்ந்த இலக்கியங்களைக் கொண்ட தொகுதிகளே இவை