பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 கங்கைக் கரையில் காவிரித் தமிழ்க்கு ஏற்பப் பாடிய பாடல்களே தமிழ் இலக்கியமாக உருப்பெற்ற வரலாற்றைக் கண்டோம்.ஆனால், திருக்குறளும் பிற அறநூல்களும் தனிப்பட்ட வகையில் இல்லாமலும் தொகை நூலாக இல்லாமலும் மக்களுக்குப் பொதுவான நூல்களாய் அமைகின்றன; அத்துடன் தனித்தனி ஆசிரிய ரால் இயற்றப்பட்ட தனித்தனி நூலாகவும் விளங்குகின்றன. இவ்வாறன மாற்றம் தமிழ் இலக்கியத்திற்கே புதிதுதானே ? இதில் பாடுவோரும் பாடப்படுவோரும் முன்னிறுத்தப் பெறவில்லை. திருக்குறளைப் பாடியவர் திருவள்ளுவர்தாம் எனினும், அவர் இயற்பெயர் தெரிய வில்லை. நாலடியாரைப்பற்றி வழங்கும் கதையும் அவ்வளவாக ஆராய்ச்சியாளரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்நூல் முழுவதும் எழுதியவர் ஒருவரே என்ற கொள்கை வலுப்பெற்று வருகின்றது. ஆகவே, தனி மனிதர்கள் எழுதிய முழு இலக்கியம் ஏறக்குறைய கி. பி. இரண்டாம் நூற்றாண்டில்-கடைச்சங்க காலத்து இறுதியில்-உருவாயிற்று என்பது தேற்றம். இந்த நீதி அல்லது அறம் பற்றிய இலக்கியங்களாகிய பதினெண் கீழ்க் கணக்குத் தொகுப்பு நூல்களைச் சங்க நூல்கள் என்னவிடினும், சங்கமருவிய நூல்கள் என்பர். எனினும், இவற்றுள் பல காலத்தால் மிகவும் பின்னால் தோன்றிய என்று கூறல் பொருத்தமாகும். இந்த அளவுக்கு இவற்றைக் காண்பதை விடுத்து, ஏறக்குறைய இதே காலத்தில் தோன்றிய பிறிதோர் இலக்கிய வகையைக் காண்போம். சங்கத்தின் இறுதிக் காலத்திலோ, அன்றிச் சங்கம் முடிந்த பிறகோ அதே கி. பி. இரண்டாம் நூற்றண்டினிறுதியில் காப்பியம் என்ற இலக்கிய வகை தோன்றலாயிற்று. சங்ககாலப் புலவர்கள் தம் வாழ்வின் சிறு நிகழ்ச்சியை வைத்துச் சில அடிகளில் பாட்டிசைத்தார்கள். ஆனால் இக்காப்பியங்கள் வேறொரு தலைவனது வாழ்க்கை வரலாற்றையே பல்வேறு வர்ணனைகளுடன் தொகுத்து