பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


எழுந்தன. அவற்றைப் பாட அவ்வச்சமயத்தின் அடியவர் விரும்பினர். சைவர்கள் பாடிய பாடல்கள் தேவாரமாகவும், வைணவர்கள் பாடியவை பிரபந்தமாகவும் அமைந்தன. இவற்றை ஒட்டிச் சைவர்கள் பன்னிரண்டு திருமுறை இலக்கியங்களைத் தம் சமயவரம்புக்கு உள்ளாக்கிக்கொள்ளும் வகையில் அத்துறையில் இலக்கியங்களை வளர்த்தார்கள் என்னலாம். அப்படியே வைணவர்களும் நாலாயிரப்பிரபந்தத்தை ஆக்கிக்கொண்டார்கள்.

சங்ககால இலக்கியங்களுக்கும் இவற்றிற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள. முன்னவை வீட்டைப் பற்றிக் குறிப்பாக உணர்த்தின. இவையோ, அவ் வீட்டைப்பற்றியே பெரிதும் பாடின. இறைவன் புகழைப் பல வகையில் விளக்கிக்கொண்டு இவை செல்லுகின்றன. உலகவாழ்வில் வாழ்ந்த காதல் நெறியை அடியவர்கள் கடவுளர்மீது ஏற்றிப்பாடினார்கள். கடவுளைப்பாடுவதும், அவரைப்பற்றிக் கேட்பதுமே வாழ்வின் குறிக்கோள் என்ற வகையிலேயே இலக்கியங்கள் வளரலாயின. பாடல் அமைப்புக்களும் மாறின. சந்தங்கள் வளரலாயின. சங்ககாலத்தில் பொருள் ஒன்றையே கருத்திற்கொண்டு சிறுசிறு பாடல்கள் தோன்றின. ஆனால் ஏழாம் நூற்றாண்டு முதல் இன்று வரை சொற்கள் அமைப்பும் எதுகை மோனை முதலிய செய்யுள் அமைப்புக்களும் முக்கிய இடம் பெற்று விட்டன. எனவே, பொருள் அவ்வளவாகச் சிறக்கவில்லை என்னலாம். மிகக் குறைந்த அடிகளாலாகிய குறள் வெண்பா ஒன்றினை விளக்கப் பின்னால் பல நான்கடி விருத்தங்கள் தேவைப்பட்டன. சில சொற்கள் பொருள் அற்ற ‘அசை’ என்று அமைக்கப்பட்டன; இவ்வாறு தோத்திரப் பாடல்களிலும் பிறவற்றிலும் இலக்கியம் ஒரு மாற்றத்தைக் கண்டது. எப்படியாயினும், இச்சமய இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வாழ்வில் இன்றியமையாத நிலைத்த இடத்தைப் பெற்றுவிட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை இன்று தமிழ் என்றால் அதன் இலக்கியம் சமயத்தோடு ஒன்றியதே என்று ஆய்வாளர்