பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


சமய வேறுபாடுகளுக்கிடையில் தமிழ் இலக்கியம் வளர்ந்து கொண்டே வந்தது. தத்தம் சமயக் கருத்தைப் புகுத்தி, பிற சமயங்களைப் பழித்து உரைக்காது, நேரிய வழியில் இவ்விலக்கியங்கள் அமைந்திருக்குமானால் இவை இரண்டும் போற்றப்படுவதைவிட, மிகச் சிறந்த முறையில் விளக்கமுற்றிருக்கும் என்பது உறுதி. என் செய்வது! காலக் கோளாறும், அவரவர் வாழ்க்கைக் காலச் சுற்றுச் சார்புகளும், உள்ளக் கிளர்ச்சியும் இடைக்காலப் புலவர்களை வள்ளுவர்போல—சங்கப் புலவர்களைப் போல—வாழ வைக்கவில்லை. அதனாலேதான் அவர் தம் இலக்கிய நூல்கள் வள்ளுவர் குறளினை ஒத்து அத்துணை விளக்கம் பெறவில்லை என்று கூறுவர் ஆய்ந்தோர்.

பத்துப் பதினோராம் நூற்றாண்டுக்குமேல் தமிழ் நாட்டில் இலக்கியம் மற்றொரு வகையில் வளர்ச்சியுற்றதென்பதைக் இனிக் காணல் வேண்டும். இலக்கியம் என்பது வெறும் பாட்டென்பது மட்டுமன்று என்பதை முதலிலே கண்டோம். உரை நடையும் வாழ்விலக்கியம் ஆகலாம். இளங்கோவடிகளது பாட்டின் இடையில் உள்ள உரை நடையும் இலக்கியமாய்த்தான் வாழ்கின்றது. பின்னால் வந்த எத்தனையோ உரைகளும் பிறவும் இலக்கிய வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. அந்த வகையில் மற்றொரு தனிப்பட்ட இலக்கியம் தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் வளம் பெற்று வளர்ந்தது. அதுவே கல் வெட்டு இலக்கியம்.

கல்வெட்டுகள் பெரும்பாலும் பிற்காலச் சோழர் காலத்தில் உண்டாயின. பல்லவர் காலத்தில் கல்லிற் காட்டும் சிற்பங்களைச் செதுக்கினர். அவர்தம் இடைக் காலமாகிய 7, 8 ஆம் நூற்றாண்டிலே கல்வெட்டுத் தோன்ற ஆரம்பித்ததாயினும், பிற்காலச் சோழர் காலத்திலேயே அவை பெருகின. சோழர் மட்டுமன்றிப் பிற மன்னரும் அதை வளர்த்தனர். இலக்கியம் எழுதுவது போன்று தனியாகப் புலவன் எழுதிய ஒரு காவியமோ அறநூலோ அன்று அது. ஆனால், பெரும்பாலானவை கோயிலுக்கும்