பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


பதிகாரம் போன்ற இலக்கண இலக்கியங்களுக்கு உரைகள் பிற்காலத்தில் உண்டாயின. இவற்றுள் சில முற்றிலும் இல்லை என்னுமாறு சிதைந்துள்ளன. இந்நூல்களுக்குப் பல உரைகள் பின்னர் ஏற்பட்டிருப்பினும் முதன் முதல் இவைகளுக்கு உரை உண்டானமை இக் காலத்திலேதான் என்பர் அறிஞர். இவ்வுரைகள் மூலத்தினைக் காட்டும் கண்ணாடிகளாய் அமைவதோடு, தாமே தனித்த இலக்கியம் என்னுமாறு சிறந்தும் விளங்குகின்றன. இவ்வாறான பழைய உரைகளும் பிற்காலத்து வந்த பரிமேலழகர் போன்றார் உரைகளும், சிவஞான முனிவர் போன்றோர் இலக்கண இலக்கிய சமய சாத்திரங்களுக்குச் செய்துள்ள உரை நடைகளும் சிறந்த தமிழ் இலக்கியங்களாய் இன்றும் போற்றப்பட்டு வருகின்றன. அந்த உரை நடைகளின் சொல்லழகும் பொருளாழமும் கற்பாரை உளம் மகிழச்செய்வனவாகும். அறிவறிந்த புலவர்கள் அவ்வுரை நடைகளை இக்கால உரைநடை இலக்கியத்துக்கு மேல் வரிச்சட்டமாகக் கொள்வர்.

ஏறக்குறைய இதே காலத்திலேதான், அதாவது தமிழ்ப் பேரரசர் வீழ்ச்சிக்கும் மகமதியர் ஆட்சிக்கும் இடையிலேதான் பலப்பல மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் தோன்றலாயின. சமயத்தின் பேரால் பல வடமொழிக் காவியங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. பல இலக்கண நூல்களுங்கூடப் பிற்காலத்தில் வடமொழி வரம்பினை ஒட்டித் தமிழில் எழுதப் பெற்றன. அவையெல் லாம் இன்று பெயரளவில் நாட்டில் ஒரு சிலருக்குத் தெரியும் வகையில் உள்ளனவேயன்றி நிலைத்த வாழிடம் பெறாது ஒழிந்தன.

வடமொழிக் கதைகளில் இராமாயண மொழிபெயர்ப்பை முன்னர்க் கண்டோம். அதைப்போன்றே மற்றொரு கதையாகிய மகா பாரதமும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு கதைகளும் சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றனவேனும், இவை முழுவதும்