பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

45


அக்காலத்து மொழிபெயர்க்கப்படவில்லை. கம்பர் ராமாயணத்தை மொழிபெயர்த்தார். ‘பாரத வெண்பா’ என்று ஒன்பதாம் நூற்றாண்டிலோ அதற்கு முன்போ பாரதம் மொழி பெயர்க்கப்பட்டது. எனினும், வில்லிபுத்தூரார் பாரத மொழிபெயர்ப்புத்தான் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பங்கு கொள்ளும் அளவு பயன் தரத் தொடங்கியது. இன்னும் பிற்காலத்தில், சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னுங்கூடத் திருவிளையாடல் போன்றவைகளும், பல தலபுராணங்களும் மொழிபெயர்க்கப்பெற்றன. எனினும், அவை சமயம் பற்றியும் கற்பனை அதிகமாகக் கலந்தும் எழுதப்பட்டமையின் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்த இடம் பெற்றில. பரஞ்சோதியார் திருவிளையாடல் ஓரளவு போற்றப்படுகிறது. இவ்வாறு தமிழ் இலக்கிய உலகில் மொழிபெயர்ப்பு இலக்கியம் சிறந்த இடம் பெற வேண்டியதாய் அமைந்த போதிலுங்கூட, அவை தமிழர் தம் வாழ்வோடு மாறுபட்டமையினாலோ அன்றி வேறு எதனாலோ அத்துணை நிலைத்த இடத்தை இலக்கிய உலகில் தேடிக் கொள்ளவில்லை. எனினும், அவற்றுள் காஞ்சிப்புராணம், தணிகைப் புராணம் போன்ற நூல்கள் இலக்கியம் எனப்படத் தக்கனவேயாம்.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மற்றொரு நிலை சிறு பிரபந்தங்கள் தோன்றி வளர்ந்த வரலாறு, சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் இத்தகைய பிரபந்தங்கள் இல்லை என்னலாம். கடவுளையோ உயர்ந்தாரையோ முதல்வராக வைத்துப் பலப்பல வகையில் அவரைப் பாராட்டியும் புகழ்ந்தும் பத்து, இருபது, முப்பது, நாற்பது, நூறு, நானூறு ஆகிய பாக்களால் பாடப்பெறும் நூல்களே சிறு பிரபந்தங்களாகும். இவற்றுள் கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், தூது, பரணி போன்ற நூல்கள் முக்கியமானவையாகும். இவையெல்லாம் காலத்தால் மிக மிகப் பிந்தியவையே. 9ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் பாடிய ‘ஆதி உலா’ ஒன்றைத் தவிர மற்றவை பெரும்பாலும் பிற்பட்டவைதாம். எனினும் அவற்றின்