பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

47


கலந்து, வேறாகப் பாகுபடுத்த முடியாவகையில் இணைந்து நிலைபெற்றுவிட்டன, அவற்றைப் போன்றே பௌத்த சமண இலக்கியங்களும் நாட்டில் இடைக்காலத்தில் இடம் பெறலாயின. எனினும், அவற்றுள் மிகச் சிறந்த இலக்கியங்களாகிய ஒன்றிரண்டைத் தவிர்த்துப் பெரும்பாலான வழக்கழிந்துவிட்டன என்பது கண்கூடு.

இந்திய நாட்டில் காலம் செல்லச் செல்ல பிற நாட்டாரும் இத்துடன் தொடர்பு கொள்ள விரும்பினர்; இந் நாட்டில் இடம் தேடலாயினர். ஆகையினால், மகமதியரும் கிறிஸ்தவரும் அவர்தம் ஆளுகையும் சில நூற்றாண்டுகள் இந்திய நாட்டில் இடம்பெறல் நேர்ந்தது. மகமதியராட்சி, காலத்தால் சிறியதாய் அமைந்ததேயாயினும், அது நாட்டில் புகுத்திய மொழி கலாசார மாறுபாடுகள் அளவில. மொழியிலேகூட அவர்தம் இந்துஸ்தானிச் சொற்கள் இடம் பெறலாயின. தமிழிலும் இத்தகைய மாறுபாடுகள் மிகச்சில உண்டாயின. தமிழ் இலக்கியத்திலும் ஒரு புது வளர்ச்சிக்கு இடம் உண்டாயிற்று. தமிழராயிருந்து மகமதிய மதத்தைத் தழுவினவரும் பலர் உளர். அவர் தம் சமய உண்மைகளைத் தமிழில் எழுத ஆசை கொண்டனர். எனினும், அவருள் சிறந்த புலவர் பலர் இன்மையின், இஸ்லாமிய இலக்கியம் மிகக் குறைவாகவே இன்று தமிழ் நாட்டில் உலவுகின்றது. உமறுப் புலவர் போன்ற கவிஞர்களும் சீதக்காதி போன்ற புரவலர்களும் ஆங்காங்குத் தமிழ் நலம் கண்டு, அதன் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்தனர். ‘செத்துங் கொடுத்தான் சீதக்காதி’ என்று புலவரைக் காக்கும் அப்புரவலன் கொடைத்தன்மையை இன்றும் நாடு புகழ்கின்றது. சில சில தமிழ்ப் பாடல்களும் சில இலக்கியங்களும் தவிர அதிகமாக மகமதியத் தமிழ் இலக்கியம் வளரவில்லை என்னலாம்.

ஆனால், பின் மேலை நாட்டிலிருந்து வந்த கிறித்தவர்கள் தமிழை நன்கு பயின்று அதன் இலக்கியவளத்துக்குப் பாடுபட்டார்கள் என்பது நாடு கண்ட ஒன்று. மேலை