பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய உலகம்

57


பின்னால் எழுந்த கதைகள் பற்றியனவேயாகும். ஆனால், வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட இரு பெருங்காப்பியங்கள் மட்டும் சங்க காலத்திலேயே கதைகளைப் போன்று உவமையாக எடுத்தாளப்பட்டன. இதன் மூலம் ஓர் உண்மை வெளியாகும் என்று கருதுகிறேன். ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை’ என்று பாரதியார் கூறியபடி, அக்காலத் தமிழர் தம் நாட்டில் கதைகளை எழுதி வைத்து அவற்றையே எண்ணிக்கொண்டிராதவராய்த் தத்தம் வாழ்வை எண்ணி, அவற்றால் வரும் நிகழ்ச்சிகளையே பாட்டாக எழுதினார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில், காப்பியங்கள் கடைச் சங்க காலத்தின் இறுதியிலேதான் எழுந்தன. அந்த முதல் காப்பியம் எழுதத்தான் எத்தனை பேச்சு, போட்டி எல்லாம்! சாத்தனாரை இளங்கோவடிகள் ‘எழுதுக’ என்று சொல்ல, அவர் திருப்பி ‘அடிகள் நீரே அருளுக!’ என, கடைசியில் வேறு வழியின்றி இளங்கோவடிகள் அந்த முதல் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைப் பாடி முடித்தார்! ஆம்! முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரந்தான். அதற்கு முன் தமிழில் காப்பியம் இல்லை என்னலாம்.

சங்க காலத்தில் காப்பியம் இன்றேனும், காப்பியத்தில் வழங்கும் கதைகளை எடுத்தாண்டார்கள் என்பதைக் கண்டோம். அவற்றுள் இரண்டொன்று கண்டு மேலே செல்வோம். அவைகளும் வடமொழிக் காப்பியக் கதைகளேயன்றி, தமிழ்க் காப்பியக்கதைகளல்ல.

‘கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
...........
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு’

எனவும்,