பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்



‘பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!
காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டு அறிந்தேன் வாழி காவேரி!’

என்ற பாடல் நம்மைக் கங்கைக் கரையை மறக்கச் செய்து, காவிரிக் கரைக்கு ஈர்த்துச் செல்லவில்லையா? அக்காவிரி நாட்டு அரசனைப் பற்றி அவர் பாடும்போதுதான் நமக்கு—சிறப்பாகத் தமிழருக்கு—எத்துணைப் பெருமிதம் உண்டாகின்றது!

‘எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
நாவிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என்பதியே’

என்று அறங்கூறும் அவையில் பாண்டியன் முன் நின்று பத்தினி கண்ணகி தன் ஊர்பற்றியும், நாடாண்ட நல்ல சோழர்களைப்பற்றியும் கூறும்போது நம் பெருமையால் நம்மை அறியாமல் விம்மிதம் கொள்கின்றோமல்லமோ?

‘யாண்டும் திங்களும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள
ஒருபகல் எல்லையில்’

வடவாரியரைச் சேரன், செங்குட்டுவன் வெற்றி கொண்டான் என்னும் போது நமது தோள் பூரிக்கவில்லையா?

‘பாண்டியன் மாதேவியர், ஆண்டே பெருந்திருவுறுக
நம் அகநாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்’

என்று வானவன் மாதேவியார் தம் கணவன் செங்குட்டுவனுக்கு உணர்த்தும்காலைத் தமிழ்நாட்டுப் பெண்ணினம் தலைநிமிர்ந்து நிற்கவேண்டாவா! இவ்வாறு எத்தனை எத்தனையோ வகையில் சிலம்புச்செல்வம் செழிக்கின்றது.