பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய உலகம்

65



முதற்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைப் பற்றியே பலப்பல நாள்கள் பேசிக்கொண்டே செல்லலாம். ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியார் அதைப் பாராட்டியுள்ளார். ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப’ மொழிந்த இளங்கோவடிகளின் திறம் அறிந்தறிந்து மகிழக்கூடியதாகும்.

அடுத்து வரும் மணிமேகலையும் ஓருண்மையை அடிப்படையாகக்கொண்டே எழுந்த நூலாகும். தமிழ்நாட்டில் அதுவரையில் இல்லாத சமய வேறுபாட்டைப் புகுத்திய நூல் மணிமேகலையேயாகும். சாத்தனார் பௌத்த சமயத்தவர். அச்சமயத்தில் அவர் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர். ஆதலினால் அச்சமய உண்மையை நூல் முழுவதும் கதைக்கிடையே வைத்துக் காட்டிக்கொண்டே செல்கின்றார். அக்காப்பியத்தின் அடிப்படையே பிறர்க்குத் தீங்கியற்றா வாய்மைதானே? உயிர்கள் பசியும் பிணியும் நீங்கிச் சிறக்கவேண்டுவதாகிய அந்த அடிப்படையிலேதான் மணிமேகலையும் தோன்றிற்று. ஆபுத்திரன் அமுதசுரபியைக் கையில் கொண்டு பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுமாறு, பாடுபட்டான். மக்கள் தொண்டே சமயத்தொண்டு என்ற உண்மையில் தோன்றிய அப்பௌத்த சமயத்தின் கொள்கைகளைத் தமிழில் நன்கு விளக்கிக் காட்டும் நூல் மணிமேகலை ஒன்றே. அச்சமயம் பற்றி என்னைக் காட்டிலும் புத்த கயையின் அருகிலே உள்ள நீங்கள் நன்கு அறிவீர்கள். மெய்ச்சமயம் கண்ட புத்தன் மக்கள் வாழ்வை மலரவைக்கத் தன் வாழ்வைத் தியாகம் செய்தான். கோவலன் மகளாகிய மணிமேகலையும் அந்த நிலையிலேதான் அச்சமயப் பணியை மேற்கொண்டாள். உலக நிலையாமையையும் உடல் நிலையாமையையும் உணர்த்தும் அடிகள் அந்நூலில் அளவில.

வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
5