பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


செய்தும் தம் புகழ் நிறுவி மாய்ந்த அடியவர் தமிழ் நாட்டில் பலர் வாழ்ந்து வந்தனர். வரலாறு வரையறுக்க முடியாத காலம் தொட்டு ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த அச்சைவ அடியார்களைப் பற்றி முதன் முதல் தொகுத்து எழுதியவர் சுந்தரமூர்த்தி அடிகளாராவர். திருத் தொண்டத் தொகை என்னும் அப்பதிகத்தே அவர் அறிந்த சைவ அடியார்களைத் தொகுத்து எழுதியுள்ளார். சேக்கிழார் பாடிய பெரிய புராணத்துக்கு இத்திருத் தொண்டத் தொகையும், பின் நம்பியாண்டார் நம்பி பாடிய திருவந்தாதியுமே மூல ஊற்றாய் அமைந்தன.

சேக்கிழார், காலத்தால் பிந்தியவர்; வேளாண் குலத்தவர்; அனபாய சோழனிடம் அமைச்சராய் இருந்தவர்; சோழன் சிந்தாமணியைப் படித்துக்கொண்டேயிருப்பதைக் கண்டவர். சிந்தாமணி சமண இலக்கியமன்றோ? சைவத்திலே தோன்றிய பெரியாராகிய சேக்கிழார் இந்நிலை கண்டார். ‘சைவனாய்ப் பிறந்த சோழன், தன் சமய இலக்கியத்தில் கருத்து வையாது, இப்படிப் பிற சமயமாகிய சமண சமய இலக்கியத்தைப் பயில்வது முறையன்று’ என்று அவர் உள்ளம் சுட்டிக்காட்டிருக்க வேண்டும். உடனே அரசரை நோக்கி அவர் ‘சிந்தாமணியைப் பயில வேண்டா’ என்று சொல்லியிருப்பார். அரசன் அதற்கு இசைந்தானாயினும், அதற்கு மாற்று நூலாக வேறு ஏதாவது ஒன்று வேண்டியிருப்பான். ஆம் அதன் வழியேதான் இப்பெரிய புராணம் எழுந்தது.

பெரிய புராணத்தைச் சேக்கிழார் ‘மாக்கதை’ என்று வழங்குகின்றார். அதை அவர் சிதம்பரத்தில் இருந்து பாடியதைப் பற்றியும், அதை முடித்ததும் சோழன் செய்த சிறப்பினையும் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் பாடிய சேக்கிழார் புராணம் நன்கு விளக்குகின்றது.

சேக்கிழார் பெரிய புராணம், ஒரு சமயநூல். சைவத்தின் சிறப்பைத்தான் இதில் காண முடியும். என்றாலும்,