பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்

75


ஒரு தமிழ் இலக்கியம் பெறவேண்டிய அத்தனை அமைதிகளும் இதில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சமயத்திலும் எத்தனையோ காவியங்கள் உள்ளன. ஆனால், அனைத்தும் போற்றப்படுவதில்லை. ஏன்? சில அச்சமயத்தாராலேயே தூற்றவும் படுகின்றன. சில கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கமாட்டாமல் அழிந்தொழிகின்றன, ஒரு சிலவே வாழ்கின்றன. அப்படி வாழும் இலக்கியத்தும் தன் சமயத்தவர் மட்டுமன்றிப் பிற சமயத்தவர்களும் போற்றும் வகையில் ஒரு சிலவே வாழ்கின்றன. பெரிய புராணம் அத்தகைய ஒன்று என்னலாம். என்றாலும் அதன் நிறை ஓரளவு குறையத்தான் செய்கிறது. எப்போது? அதில் தம் சமயத்தில் மேற்கொண்ட பற்றுக் காரணமாகச் சமண சமயத்தைச் சிலவிடங்களில் பழித்துரைக்கும் போது, அவரைப்பற்றி உள்ளத்தே எழுந்த உயரிய எண்ணம் ஒரு படி குறையத்தான் செய்கின்றது. எனினும், இலக்கிய வகையிலே சேக்கிழார் பாடல்கள் சைவ இலக்கியத் துறைக்கே ஒரு செல்வமாய் விளங்குகின்றன என்னலாம். சைவ சமயத்தே எத்தனையோ புராணங்கள் உள்ளன; மொழிபெயர்ப்புக்கள் பல; அல்லாதனவும் சில. எனினும், அவற்றுளெல்லாம் இல்லாத ஓர் இலக்கியச் செறிவுதான் இதைச் செல்வமாக வாழவைக்கின்றது.

சைவ இலக்கியங்களாகிய காப்பியங்களில் பல மொழி பெயர்ப்பு நூல்களாக அமைய, இது ஒன்று மட்டும் தமிழின் முதல் நூலாகவே அமைகின்றது. மற்றும் காப்பியத்துக்கு ஏற்ற எல்லா வகையான செறிவுகளும் பெற்றமையினாலே, பிற சமய இலக்கியங்களைப் போன்று ஒதுக்கப் பெறாமல், பொதுவாக அனைவரும் பயிலக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நூல் முழுதும் நோக்கின் இது சைவர்தம் செல்வம் என்று கொள்வது மிகவும் பொருத்தமானதாகும். அதனாலேதான் தோத்திரப் பாடல்களையே பதினொரு திருமுறைகளாக வகுத்தவர்கள் இப்புராண வரலாற்றையும் சேர்த்துப் பன்னிரண்டு திருமுறை ஆக்கினார்கள் என்று எண்ண வேண்டியுள்ளது. ஆம்.