பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


என்ற பாட்டால் விளக்கி, ‘காடு சென்று தவம் செய்ப வரும் காணமுடியாத அந்த இறைவனை அன்பு ஒன்றினால் தான் காணமுடியும்’ என்று விளக்குகின்றார். இவ்வாறு வனவிலங்கைக் கொல்லும் வேடர் வழியிலே அன்பின் நிலையைக் காட்டி, அவ்வாறே உலகம் என்றென்றும் அன்பு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றது என்பதையும் விளக்கியுள்ளார். இந்த அன்புதான் அறம் காப்பது; அடியவருக்கு எதையும் வாரி வழங்கத் தூண்டுவது; வீழ்ந்தாரை வாழ வைப்பது; விழாவின் வழி நாட்டின் பசி நீக்கி நலம்பெறச் செய்வது. இந்த அன்பு, நஞ்சையும் அமுதமாக்க வல்லது என்பதை நாவரசர் வரலாற்றில் சேக்கிழார் விளக்கும் திறன் அறிந்து மகிழற்பாலதாகும்.

திருநாவுக்கரசருக்குச் சமணர்கள் நஞ்சு அருந்தக் கொடுத்தார்கள். அவர் நஞ்சு உண்டும் சாவாது அமைந்தார். அவர் அவ்வழி நாகரிகத்தின் நல்ல தலைவரானார். ‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்,’ என்ற வள்ளுவரது இலக்கணத்திற்கு இதனிலும் வேறாகிய இலக்கியம் காட்ட முடியுமா? அன்பொடு கலந்த நம்பிக்கையே நஞ்சை அமுதமாக்கவல்லது. தன்னை வழிபட்ட அடியவர் அன்பின் பொருட்டுத்தானே ஆலகாலவிடத்தை உண்டு சாவாது அவ்வடியவரைக் காத்து நிற்கின்றான் இறைவன்? அது போன்றே அவன் அடியவராகிய நாவரசரும் சமயத்தின் மேலும் அதன் வழி மக்கள் மேலும் கொண்ட அன்பினாலும், ஆண்டவனிடம் கொண்ட நம்பிக்கையினாலும் நஞ்சை அமுதமாக்கிக் கொண்டார். இரண்டையும் இணைத்த சேக்கிழார்,

‘பொடியார்க்கும் திருமேனிப் புனிதற்குப் புவனங்கள்
முடிவாக்கும் துயர் நீங்க முன்னைவிடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய பசுபதியார் தம்முடைய

அடியார்க்கு நஞ்சமுதம் ஆவதுதான் அற்புதமோ?’
(திருநா. 105)