பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்

81


என்று ஏற்றத்தோடு பாடுகின்றார். எனவே, அன்பின் ஆற்றல் நஞ்சையும் அமுதாக்க வல்லதென்பதை நாம் அறிந்து மகிழ வேண்டுவதுதானே? வள்ளுவர் வாய் மொழிப்படி அதுதானே நாகரிகம்?

இனி, அரச நெறி பற்றிச் சேக்கிழார் தம் செல்வநூலில் எவ்வாறு விளக்கியுள்ளார் என்பதைக் காணல் தக்கதாகும். நாட்டில் அரசியல் போராட்டங்கள் நிகழும் இக்காலத்தில் அவர் தம் அரசநெறி தேவைப்பட்ட ஒன்றேயாகும். ஆளப்பிறந்தவர் என்ற ஆசையிலே ‘நான், நீ’ என்று போட்டியிட்டுக்கொண்டே வாதப் பிரதிவாதங்களை வளர்க்கும் இன்றைய அரசியல் சூதாட்டக்காரர்கள் ஆட்சியை மிக எளிதாக மதித்துவிட்டார்கள் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆளலாம் என்று நினைப்பவர்களுக்குச் சேக்கிழார் நல்லதொரு பாடத்தைச் சொல்லித் தருகிறார். ஆளுதல் அத்துணை எளிதன்று. நடு நின்று, இன்னார் இனியார் என்னாது, உற்றார் மற்றார் என்னாது, ஒரே வகையில் அறம் கோலாக அமைந்து ஆணை செலுத்துவது அரிது அரிது என்று அவர் கூறும்போது நாமெல்லாம் சற்று நின்றுதான் அரசியலில் புக நினைக்கவேண்டியுள்ளது. ஆணையின் பலத்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம்; கொல்லலாம்; குமைக்கலாம்; குண்டு வீசலாம் என்று பேசியும் செயலாற்றியும் வரும் வல்லரசுகளுக்குச் சேக்கிழார் பாடம் சித்தத்தில் தேக்கி வைக்கவேண்டிய செல்வம் மிகுந்த பாடமாகும். ஆனால், அதை அறிவார் எத்துணையர்? அறியினும், அதன்படி நிற்க நினைப்பார் யார்?

மனுச்சோழனைப் பற்றிச் சேக்கிழார் பாடிக்கொண்டே வருகிறார். அச்சோழன் மகன் செலுத்திய தேர்க்காலில் ஒரு கன்று வந்து வீழ்ந்து இறக்க, அதற்குக் கழுவாயாகத்

6