பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்

83


வகையிலாவது இருக்க வேண்டுமென்பதுதானே இன்றைய நியதி? ‘சிவில்’ வழக்குகள் உரிமை பற்றி நடக்கும் நீதிமன்றங்களில் இவ்வுண்மையை நன்கு கண்டறியலாம். இதே உண்மையைச் சேக்கிழார் பல நூற்றாண்டுகட்கு முன்னரே திட்டமாகக் கூறியிருக்கிறார் என்றால், அதை வியவாதிருக்க முடியுமோ?

வன்றொண்டர் மணப்பந்தரில் அவரை அடிமையாக்க வந்த இறைவன் வழக்குத் தொடுத்து, வெண்ணெய் நல்லூர் வேதியர் முன் அவ்வழக்கினைப் பேசும் காலத்து அவர்கள் இம்மூன்றில் ஒன்றைத்தான் சுந்தரர் அடிமை என்பதை நிறுவக் காட்ட வேண்டினர்.

‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றிமற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்.’ (தடுத்தாட். 56)

என அவரை நோக்கி மன்றுளார் கேட்டதாகச் சேக்கிழார் கூறி, அக்கால வழக்கு முறையை விளக்கிக் காட்டுகின்றார். பிறகு அவர் ஆவணம் காட்டி அடிமையாகக் கொண்டார் எனக் கதை செல்கின்றது. இங்குச் சேக்கிழார் அறம் கூறும் நீதி மன்றம் நேர்மை தவறாதிருக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நெறியும் எண்ணத்தக்கதாகும்.

இனி, கடவுள் நெறியைப் பாடவந்த சேக்கிழார் அது வாழ்வோடு இயைந்த ஒன்றுதான் என்பதைக் காட்டத் தவறவில்லை. ‘கடவுள் நெறி நமக்கெல்லாம் ஒவ்வாது. அது அமைதியாய் இருந்து காலம் கழிப்பவர்களுக்குத் தான்,’ என்று பேசுபவருக்குப் பதில் கூறுவது போல, அந்நெறி எல்லாராலும் கைக்கொள்ளப்படுவதே ஆகும் என்று பலவிடங்களில், வாழ்க்கையோடு கடவுள் நெறியைப் பிணைத்தே செல்கின்றார். அதற்கேற்றாற்போலப் பல துறைகளில் வாழ்ந்த அடியவர், அவர் வரலாற்று