பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


‘ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
        அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
        திருந்து சாத்துவிகமே யாக
இந்துவாழ் சடையார் ஆடுமா னந்த
        எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து

        மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்,’

(தடுத்தாட். 106)

என்று மக்கட்கு வழிபாட்டு முறையை வற்புறுத்துகின்றார். இவ்வாறு எத்துணையோ சமய நெறிகளையும் வாழ்க்கை முறைகளையும் சேக்கிழார் தம் கதைப் போக்கிலேயே காட்டிக்கொண்டே செல்கின்றார். அவை விரிப்பின் பெருகும். இறுதியாக அவர் தம்மை ஆதரித்த சோழன் அனபாயனிடம் நன்றி உடையவராய் இருந்து, தம் நூலில் அவனைப் போற்றிய திறத்தினைக் காட்டி என் உரையினை முடித்துக் கொள்ளுகின்றேன்.

அனபாயன் சென்ற நெறியையே மாற்றி அமைத்த பெருமை சேக்கிழாருக்கு உண்டு. அவன் சிந்தாமணியைப் பயிலாவிடின் ஒரு வேளை பெரிய புராணமே தோன்றி இராதன்றோ! ஆகவே, பெரிய புராணத்துக்கு முதற்காரணம் அன்பாயனாவான். மற்றும் அவன் பெரிய புராணம் இயற்றுவதற்காகத் தில்லையில் செய்த ஏற்பாடுகளும், பின் அந்நூல் அரங்கேற்றக் காலத்தில் அவன் செய்த சிறப்புக்களும் மறக்கத்தக்கனவோ! அவ்வாறு தம்மைப் போற்றிய ஒரு பெருமன்னனைத் தம் பாடலில் போற்றாது விடுவராயின், சேக்கிழார் நன்றி கொன்றவராகாரோ! எனவேதான் அவர் சிறந்த இடங்களில் அவன் புகழைப் போற்றிப் பாராட்டித் தம் நன்றியைக் காட்டிக் கொள்ளுகின்றார். சோழர் குலத்தைக் குறிக்க வரும் போதெல்லாம் அனபாயன் எதிர் வருகின்றான். செம்பியன் கூன் நிமிர்ந்த காட்சி அனபாயன் செங்கோலை அவருக்கு நினைவூட்டிற்று. அதையும் காண்போம்: