பக்கம்:கடற்கரையினிலே.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புனிதவதி

27


அல்லும் பகலும் உன்னையே நினைந்துருகும் அடியார்க்கு இத்தகைய துன்பம் வரலாகுமோ; தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு மனக்கவலை இல்லையென்பது மறைமொழி யன்றோ?

"கண்ணுதற் பெருங் கடவுளே ! காரைக் கருங்கடலைக் காலையும் மாலையும் நோக்கிக் கண்ணீர் வடிக்கின்றேனே ! என் துயரைக் கண்டு உற்றார் எல்லாம் உருகுகின்றனரே !மனையறமும் மறுகுகின்றதே ! செம்மேனி எம்மானே! என் மனக்கவலையை மாற்றல் உனக்கு அரிதோ? அடியாரது அல்லல் தீர்ப்பது ஆண்டவன் கடன் அன்றோ? என் செயலாவது இனி யாதொன்றுமில்லை, ஈசனே !

"காரைத் துறைமுகமே ! இனி, யான் உன் திருமுகத்தைப் பாரேன். பார்த்துப் பார்த்துப் பதங் குலைந்தது போதும். இறைமுகம் நோக்கிய எனக்கு உன் துறைமுகத்தில் இன்னும் என்ன வேலை? இன்றே என் பந்த பாசமெல்லாம் ஒழித்தேன்; மாயப் பிறப்பறுக்கும் மெய்ப் பொருளைச் சேர்ந்தேன்; என்றும் கடவுளை நம்பினோர் கை விடப்படார்" என்று கட்டுரைத்துக் கடற்கரையை விட்டுக் காற்றினும் கடிது சென்றார் காரைக்கால் அம்மையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/29&oldid=1248537" இலிருந்து மீள்விக்கப்பட்டது