பக்கம்:கடற்கரையினிலே.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டி மன்னன்

53



²திருக்கோணமலையாக்கியவர் தமிழர் அல்லரோ? கருங்கடல் நோக்கி வளைந்துள்ள மலையைக் கோணமலை என்று பெயரிட்டழைத்த தமிழரின் அறிவு நலம் வியக்கத்தக்கதன்றோ?

"தமிழ் மணக்கும் திருநகரே ! இவையெல்லாம் உண்மையே எனினும், நீயே இலங்கை நாட்டின் தொன்னகரம்; தமிழர் வாழும் நன்னகரம். உன் கடற்கரையிலே குவிந்து கிடந்த பெருமணலைக் கண்டு, மணவை என்று முன்னையோர் உனக்குப் பெயரிட்டார்கள். இப்போது யாழ்ப்பாணம் என்ற அழகிய பெயரைத் தாங்கி நிற்கின்றாய் நீ! யாழ்ப்பாணர் என்பார் தமிழ்நாட்டுப் பழங்குலத்தார். செவிக்கினிய யாழிலே பண்ணொடு பாட்டிசைத்து இசையின்பம் விளைவித்தார் அவரே! நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞான சம்பந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குலத்திலே திருநீலகண்டர் என்னும் இசைவாணர் தலைசிறந்து விளங்கினார். தேவாரப் பாட்டைப் பண்முறையில் அமைத்துப் பாடியவர் அவரே ! இத்தகைய பெருமை வாய்த்த யாழ்ப்பானர்கள் உன்பால் வந்து குடியேறினார்கள்; கடற்கரையில் அமர்ந்து பண்ணார்ந்த பாட்டிசைத்தார்கள். மேடும் காடுமாய்க் கிடந்த உன்னைப் பண்படுத்தினார்கள். அப்போது நீ புதுப்பெயர் பூண்டாய். யாழ்ப்பாணர் திருத்திய காரணத்தால் யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றாய். அன்று முதல் உன் இசையும் இயலும் வளர்ந்தோங்கி வருகின்றன.


2. திருக்கோணமலை இப்போது Trincomalle (டிரிங்காமலி) என மருவி வழங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/55&oldid=1247664" இலிருந்து மீள்விக்கப்பட்டது