பக்கம்:கடற்கரையினிலே.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கடற்கரையிலே


இந்நெல்லை நாட்டிலே பல்லாண்டுகளாக வாழ்ந்து ஒல்லும் வகையால் தமிழ்த்தொண்டு செய்து வருகின்றேன். பாண்டி நாட்டுப் பெரும் பட்டினமாய்ப் பழங்காலத்தில் விளங்கிய கொற்கையம் பதியைக் காணும் ஆசையால் இங்குற்றேன்.

"நற்றமிழ் நாட்டுக் கொற்கைக் கடலே! நான் மாடக் கூடல் என்னும் மதுரை மாநகரம் தோன்றுவதற்கு முன்னே, இக்கொற்கையம்பதியே பாண்டியர் வாழ்ந்த தலைநகரமாய் விளங்கிற்று. இதனாலன்றோ கொற்கை வேந்தன் என்றும், கொற்கைக் கோமான் என்றும், கொற்கையாளி என்றும் பாண்டியன் பெயர் பெற்றான்? கொற்கைத் துறையின் பெருமையால் நீயும் கொற்கைக் கடல் என்று அழைக்கப் பெற்றாய்.

"தூர்ந்தழிந்த துறைமுகமே! ஈராயிரம் ஆண்டுக்கு முன்னே பாரறிந்த பாண்டித் துறைமுகம் நீயே! அந்நாளில் காயல் துறையைக் கண்டவர் யார்? தூத்துக்குடியைத் தெரிந்தவர் யார்? இக்கொற்கைத் துறையிற் குளித்த முத்து, மேலை நாட்டுக் கொற்றவர் முடிமீது விளங்கிற்று. கொற்கைத் துறைவனாகிய பாண்டியனை மேலை நாட்டுப் பெரு மன்னர் பலர் அறிந்திருந்தனர். யவன நாட்டு அகஸ்தஸ் என்னும் பேரரசனிடம் தூதனுப்பி உறவாடிய பாரத மன்னன் பாண்டியனே என்பது என் கொள்கை. இத்தகைய பெருமை யெல்லாம் முத்து விளைந்த கொற்கைத் துறையால் வந்த தன்றே? இப்போது அத்துறை எங்கே? மரக்கலங்கள் எங்கே? ஆணி முத்து விலைப்படும் அங்காடி எங்கே? மன்னர் வாழ்ந்த மாளிகை எங்கே? எல்லாம் கனவிற் கண்ட காட்சி போல் கழிந்தனவே! அன்று முத்தம் அளித்த நீயும் மூன்று மைல் விலகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/84&oldid=1248521" இலிருந்து மீள்விக்கப்பட்டது