பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



23

வெற்றிக் கோஷங்கள் இடியென அதிர்ந்தன. உல்லாசக் கூவல்கள்! ஓ, என் வாழ்விலேயே மிக ஆனந்தமான நாள் அதுதான். அதை எண்ணும்போது என் வாழ்க்கை வீணல்ல என்று நான் உணர்கிறேன். அதுதான் உழைப்பு, எனது உழைப்பு, புனிதமான உழைப்பு ஐயா அது. நான் அப்படித்தான் சொல்வேன். வெளியே சூரிய வெளிச்சத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்ததும், எங்களில் பலர் கீழே விழுந்து மண்ணை முத்தமிட்டோம். கண்ணீர் வடித்தோம். மோகினிக் கதை மாதிரி அற்புதமான அனுபவம் அது. ஆமாம். அடக்கியாளப்பட்ட மலையை முத்தமிட்டோம்; மண்ணை முத்தமிட்டோம். அதற்கு முன் எப்போதுமிருந்ததைவிட அன்றுதான் நான் மண்ணோடு மிக நெருங்கிய உறவு பூண்டுள்ளதை உணர்ந்தேன். வலின்யார், பெண்ணைக் காதலிப்பது போல, நான் பூமியைக் காதலித்தேன்!

     சந்தேகம் வேண்டாம். நான் என். தந்தையின் சமாதிக்குப்போனேன். இறந்தவர்கள் எதையும் செவிமடுப்பதில்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் போனேன். நமக்காக உழைத்தவர்களின், நாம் பட்ட துன்பங்களைக் கொஞ்சம் கூடக் குறையாமல் உடனிருந்து அனுபவித்தவர்களின் இறுதி ஆசைகளைக் கெளரவிக்க வேண்டியது நமது கடமையில்லையா?
     ஆமாம். அவர் சமாதிக்குப் போய், தரையை என் காலால் உதைத்து, அவர் கட்டளையிட்டபடியே சொன்னேன்.
     எந்தையே, அது முடிந்துவிட்டது. மனிதன் வென்றுவிட்டான். அது நிறைவேறிவிட்டது தந்தையே!' என்றேன் தான்.”