பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

நிறைய உணவு வரவழைத்துத் தருவதாக வாக்களித்தான். ஸ்பானியர்கள் இந்தியர்களை அடிமையாக வைத்துக் கொள்ள உரிமையளித்த அதே ரோல்டான், இந்தியர்களை வசப்படுத்த அவர்களுக்குள்ள வேலையைக் குறைப்பதாகவும், மேற்கொண்டு அவர்களில் யாரையும் அடிமைப் படுத்துவதில்லை என்றும் கொடுமைப் படுத்துவதில்லை என்றும் வாக்களித்தான். இதை நம்பிய சில ஏமாந்த சிவப்பு இந்திய இனத்தலைவர்கள் அவன் பக்கம் அனுசரணையாக நடந்து கொண்டார்கள். பார்த்தலோமியோ கொலம்பஸ் முதலில் சிவப்பு இந்தியத் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டான். பிறகு ரோல்டானைப் பிடித்துத் தண்டிக்க விருந்தபோது, அந்தப் புரட்சிக்கார நீதிபதி எழுபது துப்பாக்கி வீரர்களுடன் சாரகுலா என்ற இடத்திற்கு ஓடி விட்டான்.

காரலாஜல் தலைமையில் மூன்று கப்பல்கள் நிறையக் கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து உணவு ஏற்றிவிட்டானல்லவா? அந்தக் கப்பல்கள் சாண்டா டோமிங்கோவுக்கு வழி தெரியாமல் அதைக் கடந்து வந்துவிட்டன. அவை சாரகுலாவை அடைந்தன. காரலாஜல் கொலம்பசிடம் உண்மையன்புள்ளவன். ஆனால், அந்தக் கப்பலில் ஏறி வந்த சிறைக்கைதிகள் சிலரும், வேறு சில மாலுமிகளும் ஒன்று சேர்ந்து, கூட்டமாகக் கரைக்குச் சென்று புரட்சிக்காரன் போல்டானுடன் சேர்ந்து கொண்டனர். புதிய பலம் பெற்ற ரோல்டான், லாவீகா கோட்டைமீது படையெடுத்துச் சென்றான்.

அப்போது சாண்டா டோமிங்கோவில் இருந்த கொலம்பசிடம் மதிப்பு வைத்திருந்த உண்மையான ஸ்பானியர்கள் பலர் பலவிதமான உடல் நோய்களுக்கு ஆளாகிப் படுக்கைகளில் கிடந்தனர். அதனால் புரட்சிக்காரர்களை