பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

கொலம்பஸ். இங்கு அவர்கள் காட்டு மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார்கள். மான்கள், பூமா என்ற காட்டுப் பூனை, வான் கோழியைப் போன்ற பாலோன் என்ற பறவை இவற்றோடு நீண்ட வாலுடைய ஒருவகைக் குரங்கொன்றை உயிருடன் கொண்டு வந்தார்கள்.

போர்ட்டோ லிமனிலிருந்த இந்தியர்கள் கொலம்பசுக்கு இரண்டு காட்டுப் பன்றிகளை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்றைக் கொலம்பஸ் கப்பலிலேயே வைத்துக் கொண்டான். அது கப்பலிலிருந்த வரை அவனுடைய ஐரிஷ் வேட்டை நாய் வெளிக்கிளம்பவேயில்லை. பயந்து போய் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது. ஆனால், நீண்ட வால் குரங்குக்கும், அந்தக் காட்டுப் பன்றிக்கும் ஒரே போட்டியாய் இருந்தது. இரண்டையும் சண்டைக்கு வீட்டுப் பார்ப்பதில் ஸ்பானியர்கள் வேடிக்கையாகப் பொழுது போக்கினார்கள். வால்குரங்கு வேட்டையில் காயமுற்றிருந்த போதும், பின்வாங்காமல் போரிட்டது. காட்டுப் பன்றியின் நீண்ட வாயைத் தன் வாலினால் சுற்றிக் கட்டிவிட்டு, அதன் கழுத்தைப்பிடித்து கொண்டு, அது கதறித் துடிக்கக் கடித்துக்கொண்டிருந்தது. இரக்கவுணர்ச்சி சிறிதுமில்லாமல் மாலுமிகள் இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு வளை குடாப் பகுதியில், நாட்டின் உட்பகுதியில் இருந்த இந்தியர்கள் தங்க வளையங்களை அணிந்திருந்தார்கள். மூன்று பருந்து மணிகளுக்கு ஒரு வளையம் வீதம் அவை வாங்கப்பட்டன. இதில் ஒன்றுக்கு நான்கு மடங்கு இலாபம் இருந்தது. இங்கு தான் தேடிவந்த கடல்வழிக் கால்வாயைக் கண்டுவிட்டதாகக் கொலம்பஸ் எண்ணிக் கொண்டான்.