141
இஸ்பானியோலாவுக்குப் போய்ச் சேர்ந்தது. அங்கிருந்து மற்றொரு கப்பலை அமர்த்திக்கொண்டு கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பினான். ஜமைக்காவிலிருந்து வந்தவர்களில் பலர் அவனுடன் ஸ்பெயினுக்குத் திரும்பவில்லை. சாண்டா டோமிங்கோவிலேயே தங்கிவிட்டார்கள். ஜமைக்காவிலிருந்து வரும் வழியில் கப்பலில் ஓட்டை வழியாக நிரம்பிய தண்ணீரை இரைத்து வெளியேற்றும் வேலையிலேயே பத்துப்பேர் செத்துப் போனார்கள். மீண்டும் ஒரு கடற்பயணத் துன்பத்தைத் தாங்கக்கூடிய வலுவை அவர்கள் இழந்திருந்தார்கள்.
உண்மையில் கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பிய பயணமும் நீண்டதாகவும் கொந்தளிப்பு நிறைந்ததாகவும் இருந்தது.
இரண்டரையாண்டுகள் கழித்து அவன் ஸ்பெயினுக்குத் திரும்பிய நான்காவது பயணம் பயனுள்ளதாக இல்லை. அவன் நினைத்தபடி கடற்கால்வாய் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. வாணிப நிலையம் ஏற்படுத்திய வெராகுவா, தங்கம் கிடைக்கும் இடமாயிருந்தாலும் தங்கியிருக்கக் கூடிய இடமாக இல்லாமற் போய்விட்டது. எவ்வித பலனுமின்றியே அவன் தன் நான்காவது பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பெயின் போய்ச் சேர்ந்தான்.