பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சஜியன் தீவிலிருந்து மேற்கே அசோர்சுத் தீவுகள் வரையிலும் உள்ள கடற்பகுதி முழுவதும் அவனுக்ருத் தெரிந்த இடங்களே ! கப்பல் தொழிலின் ஒவ்வொரு நுணுக்கமும் அவனுக்குச் கைவந்த சரக்கு துருவ நட்சத்திரத்தை வைத் துக் கொண்டு நிலப்படங்களையும் பூரேகைகளையும் வரையும் சிறந்த பயிற்சி அவனுக்கு இருந்தது. பூகோளமும் வானியலும் பற்றி அக்காலத்தில் வெளிவந்த சிறந்த நூல்கள் அனைத்தையும் அவன் படித்திருந்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தன் திருமணத்தின் மூலம் போர்ச்சுக்கல் நாட்டின் உயர் குடும்பங்கள் இரண்டுக்கு உறவினனாக இருந்தான். இத்தனை தகுதிகளையும் வைத்துக் கொண்டு அவன் சில ஆண்டுகளில் பெரிய பணக்காரனாக ஆகியிருக்க முடியும். ஆப்பிரிக்காவின் கரையில் உள்ள சில புதிய பகுதிகளைக் கண்டுபிடித்து அவன் பிரபுப்பட்டம் பெற்றிருக்க முடியும். ஆப்பிரிக்க வியாபாரத்தின் மூலம் அவன் பெருஞ்செல்வம் சேர்த்திருக்க முடியும்.

ஆனால், அவனுடைய ஆசைக்கனவுகள் இந்தச் செயல்களுக்கெல்லாம் மேம்பட்டதாக இருந்தது. பொன்னும் மணியும் கொழிக்கும் கீழ்த்திசை நாடுகளுக்குப் புதியதோர் கடற்பாதை கண்டுபிடிக்கவேண்டும்; மேற்குத் திசையிலே கலஞ் செலுத்திக்கொண்டு சென்று கீழ்த் திசையை யடைய வேண்டும்; இதுவரை எந்தக் கப்பல் தலைவனும் காணாத உயர்புகழையும், எந்த மனிதனும் அடையாத பெருஞ் செல்வத்தையும் அடைய வேண்டும்.

இந்தியா, சீனா, ஜப்பான் முதலிய செல்வங்கொழிக்கும் கீழை நாடுகளை அடைய எளிய கடல் வழி ஒன்றைக் கண்டு பிடிக்கவேண்டும் என்ற அடங்காத ஆவல் கொலம்பசின் உள்ளத்திலே கொழுந்துவிட்டெரிந்தது. இந்த எண்ணம் அவனுக்கு எப்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. ஆனால் இதுவே அவன் வாழ்வின் இலட்சியமாக இருந்தது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.