பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

1492-ம் ஆண்டில் அரசி இசபெல்லாவும், அரசர் பெர்டினாண்டும் சேர்ந்து கொடுத்த பேட்டியில் கொலம்பசின் நிபந்தனைகளை ஏற்க முடியாது; ஆகவே அவனுக்கு அனுமதியோ உதவியோ கிடைக்காது என்று முடிந்த முடிவாகக் கூறி விட்டார்கள். வெறித்த பார்வையும் விடுபட்ட நம்பிக்கையுமாக கொலம்பஸ் தன் குதிரையின் முதுகில் தன் பொருள்களையும், நிலப்படங்களையும் கட்டிக் கொண்டு சாண்டாபீயை விட்டுப் புறப்பட்டு விட்டான். பாலோஸ் அருகில் இருந்த மடாலயம் போய் பையனை அழைத்துக் கொண்டு பிரான்சுக்குப் புறப்பட்டுச் செல்வதென்றும், மீண்டும் எட்டாவது சார்லஸ் அரசரிடம் உதவி கேட்பதென்றும் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டு அவன் புறப்பட்டு விட்டான்.

தொங்கிய முகமும் துவண்ட உள்ளமுமாக மட்டக் குதிரையின் மேலேறிச் சென்று கொண்டிருந்த கொலம்பசை நான்கு மைல் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் அரசாங்கத் தூதன் ஒருவன் வந்து சந்தித்தான். அரசி இசபெல்லா மீண்டும் அவனை அழைத்துவரச் சொன்னதாகக் கூறினான். புதிய நம்பிக்கை யோடு கொலம்பஸ் திரும்பி வந்தான். கொலம்பஸ் கேட்ட நிபந்தனைகளை யெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்வதாகவும், அவன் மேலைத் திசையில் தன் பயணத்தைத் துவக்கலாம் என்றும் அரசி இசபெல்லா கூறிய போது தான் அவன் உள்ளம் நிறைந்தது. அத்தனை நாளும் தான் பட்ட துன்பங்களுக்கெல்லாம் முடிவு வந்து விட்டது போல் களித்தான்.

அரசி இசபெல்லாவின் மனம் எப்படி மாறியது? அரசர் பெரிடினான்டின் அந்தரங்கச் செயலாளன் ஒருவன் அரசியிடம் வந்து, கொலம்பஸ் திட்டத்தையும் நிபந்தனையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். லூயிஸ் டி சாண்டாஞ்சல் என்ற அந்த