பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கருதப்பட்ட அண்டிலியாத் தீவையும் போகும் வழியிலேயே கண்டு பிடிக்க எண்ணியிருந்தான் கொலம்பஸ்.

பாலோஸ் துறைமுகத்தில் கப்பல்கள் புறப்பட்டு ஒருவாரம் ஆவதற்கு முன்பாகவே கானரித் தீவுகளை நெருங்கிவிட்டன. பிண்டா என்ற கப்பல் சிறிது பழுது பார்க்க வேண்டியிருந்ததால் அதை லாஸ்பால்மாஸ் என்ற கப்பல் கட்டும் துறைமுகத்துக்கு அனுப்புவதென்று திட்டமிட்டான் கொலம்பஸ். அவ்வாறே அதை அங்கே அனுப்பி விட்டு, மற்ற இரண்டு கப்பல்களையும் கானரித் தீவுகளில் ஸ்பெயின் நாட்டார் ஆதிக்கமுள்ள கோமாராத் துறைமுகத்தில் கோண்டு போய் நிறுத்தினான். கோமாராத் துறைமுகத்தில் உணவுப் பொருள்களும், குடிதண்ணீரும் ஏற்றிக் கொள்ளும்படி கப்பல்களின் அதிகாரிகளுக்குக் கூறி ஏற்பாடு செய்துவிட்டு கொலம்பஸ் லாஸ்பால்மாஸ் நகரம் சென்று அங்கு நடைபெறும் பழுது வேலைகளை மேற்பார்வையிட்டான். பிறகு பிண்டா என்ற அந்தக் கப்பலிலேயே ஏறிக் கொண்டு கோமாரா வந்து சேர்ந்தான். அங்கிருந்து புறப்பட்ட கப்பல்கள் கானரித் தீவுகளில் உள்ள சான் செபஸ்டியன் என்ற மற்றொரு முக்கியமான துறைமுகத்தில் 1492-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் நாள் நங்கூரம் பாய்ச்சின. அங்கு நான்கு நாட்கள் தங்கி மேற்கொண்டு வேண்டிய உணவுப் பொருள்களையும் தண்ணீரையும் நிரப்பிக் கொண்டு செப்டம்பர் மாதம் 6-ம் நாளன்று பாய்களை விரித்துக் கொண்டு புறப்பட்டன.

தெரியாத உலகத்தை நோக்கி முன்பின் சென்று அறியாத பாதையில் செல்லத் தொடங்கிய அந்த மூன்று கப்பல்களும் தெரிந்த உலகத்தை விட்டுக் கடைசியாய் புறப்பட்ட நாள் அந்த 1492 செப்டம்பர் 6-ம் நாள் தான்!

முதல் பத்துப்பனிரெண்டு நாட்களும் ஒரே நிலையாக கீழ்க்காற்று வீசிக் கொண்டிருந்தது. கப்பல்கள் மூன்றும்