பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29

ந்த அம்மாள் நிமிர்ந்து நின்று ஒரு மாம்பழத்தைப் பறித்தாள். வெண்கலம் கலந்த தங்க நிறத்திலே அத்தனை அழகான பழம். சேலையின் முந்தானையை அவிழ்த்து அதிலிருந்த ஒரு வெள்ளிப் பேனாக்கத்தியை அவள் எடுத்து மாம்பழத்தை அறுத்துக் கொடுத்தாள். பெஞ்சமின் அதிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு தின்றான்; தங்க நிறமான சாறு பெருகி அவன் வயிற்றிலெல்லாம் வழிந்தது. ஆயாவுக்குக் கவலையாகிவிட்டது. அதனால் அவனை அழைத்து வர ஜூடி எண்ணினாள், அவள் நுழைவதற்கு வேண்டிய அளவு வேலியிலே சந்திருந்தது. கைகளும் முதுகின் பெரும்பகுதியும் தெரியும் படியாகத் தைக்கப்பட்டிருந்த ஒருவகை அங்கியை அவள் அணிந்திருந்தாள். மாநிற மேனியில் படிந்தஅவள் கூந்தல் வெளுத்துத் தோன்றிற்று.

வேலியின் கோடியிலே உள்ள வாழை மரங்களின் வழியாக ஜூடி மெதுவாக வந்தாள். ஜூடியின் வீட்டுப்பக்கத்திலிருந்து பார்த்தால் தெரியாதவாறு, அந்த மூலையிலே சிவப்பும் கருஞ்சிவப்புமான புள்ளிகளுடைய இலைகளடர்ந்த அழகான செடி இருந்தது. அந்த அம்மாள் அவளைப் பார்த்த போது ஜூடி மரியாதையாகத் தன் கைகளை நெஞ்சுக்கு நேராகக் கூப்பி, வணக்கம் செய்தாள். அந்த அம்மாளும் அவ்வாறே செய்தாள். அவள் விரல்களிலே மோதிரங்கள் அணிந்திருந்தாள். ஒன்றிலே தட்டையான அழகிய வைரக்கல்லிருந்தது. அந்த அம்மாள், “நீ வந்து என்னைப் பார்க்க வேணுமென்று கான் எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்று தெளிவான மெல்லிய குரலிலே கூறினாள்.

“அப்படியா? எனக்குத்தெரியாது. நான் நினைத்தது...” ஜூடி என்ன நினைத்தாள் என்பது அவளுக்கு அப்பொழுது நிச்சயமாகத் தெரியவில்லை.