பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38

சில வேளைகளில் இந்த விஷயம் பேச்சுக்கு வரும். ஒன்றிரண்டு முறை ஜூடிக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது; மேல் நாடுகளிலிருந்து, முக்கியமாக இங்கிலாந்திலிருந்தும், ஸ்காட்லாந்திலிருந்தும் வந்த நல்லன எல்லாவற்றையும் இந்தியச் சிறுமிகள் மறந்துவிட்டதை அவளால் தாங்கமுடியவில்லை. எல்லாம் இந்தியாவிலேயே புத்தமைப்புச் செய்ததாக பாவிப்பதையும், மேல் போக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் பாட்டுக்களோடு நாட்டியங்களும் நிறைந்து, சம்பவங்களே இல்லாமல் மணிக்கணக்காக ஓடும் அவர்களுடைய மோசமான சினிமாப் படங்கள் அமெரிக்கப்படங்களைவிட நல்லவை என்று சொல்வதையும், அவளால் சகிக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் பழைய சம்பவங்களெல்லாம் சரித்திரத்தைச் சேர்ந்தவை. அந்த சரித்திரமும் முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசுவதால் அது மாறப்போவதில்லை. அதைப்பற்றி நினைக்காமல் இருந்தால் நல்லது என்று ஜூடி தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். ஐரோப்பியர்கள் இந்தியர்களாகமாட்டார்கள். அதேபோல இந்தியர்கள் எங்களைப் போன்றவர்களாகமாட்டார்கள். இதைத் தவிர வேறு விதமாகப் பாசாங்கு செய்வதில் யாதொரு பயனுமில்லை. ஒரு இனத்தவர் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று நினைப்பதெல்லாம் முட்டாள்தனம். அதனால் இதைப் பற்றி ஏன் நாம் எப்பொழுதும் தொல்லைப்பட்டுக் கொள்ள வேண்டும்? லட்சுமியின் தந்தையான குமார்,ஒரு எஞ்சினியர் என்று தந்தை சொன்னது ஜூடியின் காதில் விழுந்தது. “அவரை ஐரோப்பாவிற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஒரு பிராமணன் அவ்வாறு செல்லுவது சுலபமல்ல. தற்செயலாக அவன் உண்ணத் தகாததை உண்டுவிடலாம். அதனால் அவனுடைய தூய்மை கெட்டுவிடலாம்” என்றார் அவள் தந்தை.