பக்கம்:கடல் முத்து.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடல் முத்து
3

 விட்டால் அப்புறம் அதன் வளர்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா?

இதே போன்றதொரு பொங்கல் திருநாளில் பவளக்கொடி——நடேசன் முதல் காதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்த வட்டாரத்தில் ‘வழுக்கல் மர’ வேடிக்கை பிரமாதம். வானளாவிய கம்பமொன்று பூமியில் நடப்பட்டிருக்கும். கம்பம் பூராவும் பசை வழிந்தோடும். விரல் பட்டால் ‘சர்’ரென்று வழுக்கி விட்டுவிடும். கம்பத்தின் உச்சியில் சாயத்துண்டில் பத்து ரூபாய் முடிந்திருக்கும். பரிசைத் தட்டி, மார் தட்டிக்கொள்ள அனைவர் உள்ளமும் சுவரிலடித்த பந்தாக எழும்பும். பலர் பரிசைத் தட்டக் கனவு கண்டதுடன் சரி.

கடைசியில் நடேசன் ஒருவனால் தான் சாயத் துண்டையும், பணத்தையும் கம்பத்தின் உச்சியிலிருந்து கொணர முடிந்தது. ஆனால் கம்பத்தினூடே சார்ந்து இறங்குகையில் அவன் கால் பின்னிச் சறுக்கிவிட்டது. ‘தொபுகடீர்’ என்று பூமியில் சாய்ந்தான்.

சுய நினைவு வரப்பெற்றதும் நடேசன் துயில் நீத்து விழிகளை மலரத் திறந்தான். அவன் ஒரு பெண்ணின் கண் காணிப்பில் இருப்பதை அறிந்தான். உடம்பில் லேசாக வலியிருந்தது; பலத்த காயமில்லை.

‘மச்சான், மச்சான்' என்று பன்னெடு நாள் பழகிய பாவனையில் ஆதரவு செய்த பவளக்கொடியைக் கண்டதும், நடேசன் மெய்மறந்தான்; உடம்பு வேதனையை மறந்தான். உலகமே ஒரு சொப்பன சொர்க்கமாகத் திகழ்ந்தது. அதில் அந்த நங்கை கனவுக் குமரியாக——மாய மோகினியெனத் தோற்றம் கொடுத்தாள். அழகின் அன்வயமன்றோ அவள்!

ஆம்; அவள் அவனுள் உருமாறினாள். அப்படியே அவனும் அவளுள் இடம் பெற்றான்.

ஆக மறு மூன்று நாட்களும் நடேசன் அவள் வீட்டில் தங்கும்படி வாய்ப்பு அவர்களை ஒன்றுகூட்டியது.

‘மச்சான் அன்னிக்குக் கம்பத்திலே ஒவ்வொரு அடியா முன்னே ஏறிக் கடைசியாய்ச் செயிச்சதைக் கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/12&oldid=1181890" இலிருந்து மீள்விக்கப்பட்டது