பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


யுயும். சமுதாயத்தைச் செம்மை செய்து சமப்படுத்தும் பணி, இப்போது நாடுகளில் நடந்து வருவதாகத் தெரிகிறது. இதில் சமூகச் சீர்திருத்தக்காரர்களின் பங்கு பெரிது.


அரசின் குறை

அடுத்து, இரண்டாவது காரணமாகிய அரசியல் முறையின் குறைபற்றிப் பார்க்கலாம்: இந்தக் காலத்தில் அரசியல் கொடுமைகள் சில, பல நாடுகளில் காணப்படினும். பண்டைக் காலத்தை நோக்க, இக்கால அரசியல் முறை எவ்வளவோ சீர்திருந்தியுள்ளது எனக் கூறலாம்.

அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் அரசர் இருந்தனர். ஒருவர்க்கொருவரிடையே எப்போதும் கெடுபிடி இருந்தது. அடிக்கடி போர்-கொலை-கொள்ளை-தீவைப்பு -கற்பழிப்பு-இப்படிப் பல கொடுமைகள் மாறி மாறி நடந்துகொண்டேயிருந்தன. தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரராய்க் காணப்பட்டனர். இந்நிலையில் மக்களின் வாழ்க்கையமைப்பு எத்தகையதாயிருந்திருக்கக்கூடும் என்று உய்த்துணர முடியும். அரசரைச் சார்ந்தோர்-அரசியலைச் சார்ந்தோர் வசதி பெற்றவராகவும், அல்லாதார் வசதி அற்றவராகவும் வாழ்ந்தனர். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நிலைமை சில இடங்களில் காணப்படுகின்றதன்றோ? அந்தக் காலத்திற்குக் கேட்கவா வேண்டும்! அரசர்கள் சிலரை உயர்த்தினர்; பலரைத் தாழ்த்தினர். உயர் சாதிக்காரர் எனப்படுபவர் அரசர்களால் உயர்த்தப்பட்டனர்; பல வாய்ப்பு வசதிகள் அளிக்கப் பெற்றனர். கீழ்ச்சாதிக்காரர் எனப்படுபவர் அரசர்களாலும் அரசர்களின் ஆதரவு பெற்றவர்களாலும் ஒடுக்கப்பட்டனர்; இழிந்த வேலைகள் செய்யும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். இவ்வாறாக,