பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டாரி நீட்டுகின்றார்.

தென்சு நகர மக்கள் பேரவை கூடியிருக்கிறது. சிந்தனைச்சிற்பி சாக்ரட்டீசு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருக்கிறார். நாத்திகத்தைப் பரப்புகிறார் என்பதும், இளைஞரின் பிஞ்சுள்ளங்களில் நஞ்சைத்துாவுகிறார் என்பதும் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள். அஞ்சாமை மிக்க ஆண்மைச் சொற்களுக்கு, இப்பேச்சு ஒரு முன்மாதிரி. மேலை நாட்டுச் சிந்தனையில், கருத்தாழத்தோடு முளைத்த கன்னிப்பேச்சு இது.

ஏதென்சு நாட்டவரே ! குன்றெடுத்த
எர்குலிசின் பரம்பரையே ! அத்து மீறிக்
காதலித்துக் கரையோரம் ஆயிரம் போர்க்
கப்பல்களை வரவழைத்த அழகுப் பூசல்
மாதரசி ஹெலனுக்குப் பின்பி றந்த
மறவர்களே ! இறவாமல் இனிக்கும் காதற்
காதைக்குள் கவிதைக்குள் வாழும் ஹோமர்
கால்வழியில் வந்தவரே ! கிரேக்க மக்காள்!

எழுத்துக்கள் அணிவகுக்கும் வாக்கி யத்தின்
எல்லையிலே நிற்கும் வினாக் குறியைப் போலக்
கிழத்தன்மை யால் முதுகு வளைந்து விட்டேன்.
கேள்வியினால் இந்நாட்டு மடத்த னத்தை
முழம்போட்டுப் பார்ப்பதுதான் எனக்கு வேலை!
முட்டாளை மூக்கறுத்தேன் என்ப தல்லால்
பிழையென்ன, செய்துவிட்டேன் நாட்டில் ? இந்தப்
பேரவையில் அமர்ந்திருப்போர் சிந்திக் கட்டும்.

க. தி.1 - 627