பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கங்கையின்
காதலன்

ண்டித நேரு அவர்கள் சிறந்த இலக்கிய அறிஞர்; வரலாற்றாசிரியர்; ஆங்கில மொழியை நாடித் துடிப்பறிந்து நடத்தும் ஆற்றல் மிக்க எழுத்தாளர்; உருதுமொழியில் கவிதை எழுதும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். இவர் இந்திய மக்களுக்கு விட்டுச் சென்ற இறுதி மடல் (will) ஒரு சுவையான இலக்கியம்.


அதில் நேரு தம் கொள்கைகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்; தம் ஆவல்களுக்கு வரி வடிவம் கொடுத்திருக்கிறார். இந்திய நாட்டின் முக்காலச் சிறப்பையும் கங்கையோடு பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார். பழமைச் சிறப்பின்மீது கொண்ட பற்றையும், பழமைக்கும் புதுமைக்கும் இடையில் நிகழும் அவரது உளப்போராட்டத்தையும், இதில் காணலாம். இக்கருத்துகளைக் கவிதைக் கண் காட்சி ஆக்கியிருக்கிறேன்.


துள்ளுநீர் பாயுங் கங்கை
தோன்றுமென் னாட்டார் என்னை
உள்ளத்தில் சிலையாய் வைத்தார்;
ஊற்றெடுத் தொழுகு மன்பு
வெள்ளத்தில் மூழ்க டித்தார்;
வேறதற் கீடாய் நானோ
எள்ளள வன்பைக் கூட
இன்னமுங் கொடுக்க வில்லை.