பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


இந்திய நாட்டு மக்கள்
இதயத்தில் பாயு மாறு!
சிந்தனை வீரம், நம்மோர்,
சேர்த்தநற் கலைகள் வாசச்
சந்தனம் நாக ரீகம்
சார்ந்தநம் பிக்கை யாவும்
உந்தியே பாயு மிந்த
உயர்மலைக் கங்கை யாறு.


என்னுடல் வீழ்ந்த பின்னர்
எரித்தஅச் சாம்பல் தன்னைப்
பொன்னொளிக் கங்கை யாற்றில்
போடுக கொஞ்சம்; பின்னர்
என்னுயிர்க் குயிர தான
இந்திய நாட்டில் உள்ள
பண்ணையில் தூவ வேண்டும்
பறக்கின்ற ஊர்தி ஏறி.


கங்கையில் எனது சாம்பல்
கலப்பதால் ஆத்தி கத்தில்
சங்கமம் ஆனேன் என்று
சற்றும்நீர் எண்ண வேண்டாம்,
கங்கையிந் நாட்டின் சின்னம்;
காக்கின்ற உழவ ரெல்லாம்
தங்கிவாழ் பண்ணை தானித்
தாயகத் துயிர தாகும்.